Published : 30 Jul 2018 04:19 PM
Last Updated : 30 Jul 2018 04:19 PM

அமைச்சராக நான் செய்த பணிகள் என்ன? முதல்வராக நீங்கள் செய்தவை என்ன? விவாதம் நடத்த தயாரா? - முதல்வர் பழனிசாமிக்கு அன்புமணி சவால்

அமைச்சராக நான் செய்த பணிகள் என்ன என்பது குறித்தும், முதல்வராக நீங்கள் செய்தவை என்ன என்பது குறித்தும் விவாதம் நடத்த தயாரா எனவும், பாமக இளைஞர் அன்புமணி ராமதாஸ் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “சேலத்தில் அரசுப் பொருட்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது தமிழக மக்களுக்காக என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் பணத்தில் நடந்த அரசு விழாவில், அவரது சாதனைகளைப் பற்றிக் கூறுவதற்கு பதிலாக, எனது சாதனைகளைப் பற்றிக் கேட்கிறார் என்றால் அவரது மனம் அச்சத்தில் எந்த அளவுக்கு குழம்பிக் கிடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

எனது சாதனைகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எடப்பாடி பழனிசாமிக்கு இருந்திருந்தால் அதை அவர் என்னிடமே கேட்டிருக்கலாம். அவருக்கு நான் சிறப்பாக வகுப்பெடுத்திருப்பேன். மாறாக யாரோ எழுதிக் கொடுத்த துண்டுக் காகிதத்தை திக்கித் திணறி படித்திருக்கத் தேவையில்லை. பூனைக் கண்களை மூடிக்கொண்டு பூலோகமே இருண்டு விட்டதாக நினைத்துக் கொண்டிருக்குமாம். அதேபோல் தான் மணல் கொள்ளை வருமானம், நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த ஊழல் ஆகியவை குறித்தே கண்களை மூடி ஜெபித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழக மக்களுக்காக நான் செயல்படுத்திய திட்டங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நான் மத்திய அமைச்சராக இருந்த போது தமிழகத்தில் நடப்புகளை தெரிந்து கொள்ளும் இடத்தில் இருந்தாலாவது அவருக்கு எனது சாதனைகள் தெரிந்திருக்கும். ஆனால், 2001 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடக்கூட இடம் கிடைக்காமலும், 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் பாமக ஆதரவு திமுக வேட்பாளரிடமும், 2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் பாமக வேட்பாளரிடமும் படுதோல்வி அடைந்து அரசியல் துறவறம் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு நான் ஆற்றிய மக்கள் பணிகள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். அப்பணிகளை அவருக்கு விளக்குகிறேன்.

உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் என்றால் அது தேசிய ஊரக சுகாதார இயக்கம் தான். இந்த திட்டத்தை 2005 ஆம் ஆண்டில் நான் தான் தொடங்கினேன். இந்தத் திட்டத்தின்படி நான் பதவி வகித்த 5 ஆண்டுகளிலும், அதற்கு பின்வந்த 9 ஆண்டுகளிலும் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை மட்டும் சுமார் ரூ.25,000 கோடி ஆகும். இந்த நிதியைக் கொண்டு தான், தமிழகத்தில் சீரழிந்து காணப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களும், அரசு மருத்துவமனைகளும் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றன.

இந்திய விடுதலைக்குப் பிறகு மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு, அனைத்துத் தரப்பினர் வரவேற்பையும் பெற்றத் திட்டம் என்றால் அது 108 அவசர ஊர்தித் திட்டம் தான். முதல்வர் பயணம் செல்லும் போது அவருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க வசதியாக அவரது வாகன அணிவகுப்பில் 108 அவசர ஊர்தி ஒன்றும் செல்லும். கருவுற்ற தாய்மார்களுக்கு மகப்பேறு பார்க்க உதவுவதில் தொடங்கி முதல்வரின் உயிரைக் காப்பது வரை அனைத்துக்கும் உதவுவது நான் தொடங்கி வைத்த 108 அவசர ஊர்தித் திட்டம் தான்.

முதல்வர் வெளியில் செல்லும் போது , பின்னால் திரும்பிப் பார்த்தால் அவரது உயிரைக் காக்க நான் உருவாக்கிய 108 அவசர ஊர்தி பின்னால் வருவதை பார்க்க முடியும். தமிழகத்தில் தாய்-சேய் இறப்பு விகிதம் குறைந்திருப்பது முக்கியக் காரணம் 99% மகப்பேறுகள் மருத்துவமனைகளில் நடப்பது தான். அதற்கு காரணம் 108 அவசர ஊர்தி சேவை தான். தமிழ்நாட்டில் 108 அவசர ஊர்தி சேவை தொடங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு வரை 9 ஆண்டுகளில் 25,000 குழந்தைகள் அவசர ஊர்தியில் பிறந்துள்ளன என்பதிலிருந்தே இதன் பயன்களை உணர முடியும். இந்த உண்மைகள் எல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லை என்றால், அவர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர் என்று பொருள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்த அளவுக்கு அறியாமையில் மிதக்கிறார் என்பதற்கு சேலம் நகரத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் தான் சாட்சி. சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொருட்காட்சி திறப்பு விழாவுக்கு வரும் வழியில் சாலையின் இருபுறத்திலும் பார்த்துக் கொண்டு வந்திருந்தாலே மக்களுக்காக நான் செய்த நன்மைகள் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்திருக்கும். சேலத்தில் 139 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அதி உயர் சிறப்பு மருத்துவமனை நான் கொண்டு வந்த திட்டம் தான். அதற்கான நிதியை நான் தான் ஒதுக்கினேன். முதல்வரான பின்னர் பல முறை அந்த மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்த எடப்பாடி, அம்மருத்துவமனையைக் கட்டியது யார்? என்ற வரலாற்றைக் கேட்டுத் தெரிந்திருக்க வேண்டாமா?

சேலத்தில் தொடர்வண்டிக் கோட்டம் அமைக்க வேண்டும் என்பது அரை நூற்றாண்டுக் கனவாகும். சேலம் கோட்டம் அமைக்க வேண்டும் என்று 1952 ஆம் ஆண்டு சேலம் சூரமங்கலத்தில் நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற பெரியார் வழி வந்ததாகக் கூறிக் கொள்ளும் திராவிடக் கட்சிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கூட நிறைவேற்ற முடியாத இந்தக் கோரிக்கையை நிறைவேற்றி சாதித்தது பாமக தான். சேலம் மாநகரில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஏராளமான தொடர்வண்டித் திட்டங்களையும், தொடர்வண்டி மேம்பாலங்களையும் அமைத்தது பாமக தான். தமிழகத்தில் அனைத்து மீட்டர் கேஜ் பாதைகளையும் அகலப்பாதைகளாக மாற்றியது பாமக தான். ஊழலும், பணமும் கண்களை மறைத்துக் கொண்டிருந்தால் இந்த உண்மைகள் தெரியாது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த அறிவிப்பு வெளியானதையே தமது சாதனையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால், சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பே மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதுடன், அதற்காக ரூ.150 கோடி நிதியும் ஒதுக்கினேன். ஆனால், ஜெயலலிதா தலைமையிலான அரசு, அதற்கான நிதியை வேறு திட்டங்களுக்கு செலவழித்து விட்டது. அப்போது மதுரையில் எய்ம்ஸ் அமைக்கப்பட்டிருந்தால் கடந்த 10 ஆண்டுகளில் அது விரிவாக்கம் செய்யப்பட்டு தென் மாநிலங்களின் மிகப்பெரிய மருத்துவமனை மற்றும் கல்லூரியாக உருவெடுத்திருக்கும்.

மக்களுக்கு பெருந்தீமையை ஏற்படுத்தும் குட்காவை தடை செய்தது நான் தான். ஆனால், தடை செய்யப்பட்ட குட்காவை விருப்பம் போல விற்பனை செய்து கொள்ள அனுமதித்து, அதற்காக கோடிக் கணக்கில் ஊழல் செய்து குவித்து வைத்திருப்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை தன்னாட்சி நிறுவனமாக மாற்றி, ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மேம்படுத்தியுள்ளேன். அதன்பயனாக தமிழகத்தின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் உலகத் தரம் வாய்ந்த மருத்துவத்தை இலவசமாக பெற முடிகிறது. தரமான, தகுதிவாய்ந்த முதல்வராக இருந்தால் இவை குறித்து தெரிந்திருக்கும். ஆனால், மணல் கொள்ளை, மது வணிகம், நெடுஞ்சாலை ஒப்பந்த ஊழல் ஆகியவற்றை மட்டுமே முழுநேரத் தொழிலாகக் கொண்டவர்களுக்கு இவை தெரியாது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக நான் படைத்த சாதனைகள் இத்துடன் முடிந்து விடவில்லை. இதோ எனது சாதனைப் பட்டியல்.

* சென்னையில் ரூ.100 கோடியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அதி உயர் சிறப்பு மையம்.

* சென்னையில் ரூ.250 கோடியில் பிளாஸ்மா பிரிப்பு மையம்.

* தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் மருந்து ஆய்வகம்.

* சென்னையில் 112 கோடியில் மூத்த குடிமக்கள் கவனிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்.

* சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் குருத்தணு ஆய்வு மையம்.

* தருமபுரியில் அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வருவதற்கு உதவி.

* தமிழ்நாட்டில் ஹெச்.ஐ.வி./ எய்ட்சை கட்டுப்படுத்த சிறப்புத் திட்டங்கள்.

* செங்கல்பட்டில் ரூ. 1,000 கோடியில் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்திப் பூங்கா.

* காஞ்சிபுரத்தில் ரூ.45 கோடியில் மண்டல புற்று நோய் மையம்.

* வேலூர் வாலாஜா, சேலம் ஓமலூர், மதுரை மேலூர், கடலூர், தாம்பரம், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 இடங்களில் சாலை விபத்துக்களில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான விபத்துக்காய சிகிச்சை மையங்கள்.

இவை தவிர, பாமக ஆட்சிக்கு வராமலேயே தமிழகத்திற்கு செய்த பணிகள் அளப்பரியது ஆகும். அவற்றை முழுமையாக பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது என்பது தான் உண்மை.

மக்களுக்கு எது நன்மை, எது தீமை என்பதை அறிந்து மக்களுக்கு தேவையான திட்டங்களை மட்டும் தான் செயல்படுத்தி வருவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். மக்களுக்கு நன்மை செய்வதாக அவர் கூறுவதைக் கேட்கும் போது நகைப்பு தான் வருகிறது.

* தமிழகத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள 3,321 மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி தீர்ப்பு பெற்றது பாமக. ஆனால், ஊரக ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை பாதிக்கும் நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்று வழக்கு நடத்தாத தமிழக அரசு, மதுக்கடைகளை திறப்பதற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்குத் தொடந்தது. மதுக்கடைகளை மூட வேண்டும் என்று போராடுவது தீமை. மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்று துடிப்பது தான் நன்மையா?

* புகையிலையால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத் தான் பொது இடங்களில் புகைப் பிடிக்க தடை விதித்தேன். குட்காவை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வந்தேன். ஆனால், இரண்டையுமே தமிழக அரசு செயல்படுத்தவில்லை. மாறாக குட்கா விற்பனைக்கு சட்டவிரோத அனுமதி வழங்க கோடிகளில் லஞ்சம் வாங்கிக் குவிக்கிறது தமிழக அரசு. குட்கா விற்பனைக்கு தடை விதிப்பது தீமை. லஞ்சம் வாங்கி அதை விற்க அனுமதிப்பது நன்மையா?

* ஆறுகளில் மணல் எடுத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனவே அதை செய்யக்கூடாது என்று மக்கள் போராட்டமும், சட்டப் போராட்டமும் நடத்துவது தீமை. மாறாக ஆற்று மணலை சுரண்டி ஆண்டுக்கு ரூ.40,000 கோடி சுரண்டுவது தான் நன்மையா?

* விவசாயிகளின் நிலங்களை 8 வழிச்சாலைக்காக பறித்துக் கொள்வதால் 15,000 விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று பாமக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், யாருமே எதிர்க்கவில்லை என்று கூறி நிலங்களை வளைக்கிறது தமிழக அரசு, இதை தாங்க முடியாமல் திருவண்ணாமலை மாவட்டம் மேல்வடக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்ற விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். விவசாயிகளை வாழ வைக்க வேண்டும் என்று நாங்கள் நடத்தும் போராட்டம் தீமையானது. விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டுவது நன்மையா?

* காவிரி பாசன மாவட்டங்களை பாழ்படுத்தும் வகையில் ஓஎன்ஜிசி நிறுவனம் அதன் விருப்பம் போல எண்ணெய்க் கிணறுகளைத் தொடங்க அனுமதி அளிப்பது தான் எடப்பாடிக்கு தெரிந்த நன்மையா?

* புற்றுநோயை உண்டாக்கும் தொழிற்சாலையாக திகழும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படுவதும், அதை எதிர்த்து போராட்டம் நடத்திய மக்களை துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை படுகொலை செய்வது தான் எடப்பாடி பழனிசாமி செய்யும் நன்மையா?

எடப்பாடி பழனிசாமிக்கு இது போன்ற செயல்கள் தான் தெரியும். இவற்றைத் தான் அவர் நன்மையாக கருதுவார். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனது ஓர் அரசியல் விபத்து ஆகும். அவருக்கு எந்த பாரம்பரியமும் தெரியாது. பொது அறிவோ, அரசு நிர்வாகமோ அவருக்கு கை வராது. ஜெயலலிதாவாக இருந்தாலும், சசிகலாவாக இருந்தாலும் காலில் விழுந்து பதவி வாங்குவது மட்டும் தான் அவருக்கு கைவந்த கலையாகும்.

அடிமைகளால் காரியம் சாதித்துக் கொள்ளத் தான் முடியுமே தவிர, மக்களுக்கு சாதனை செய்ய முடியாது. ஒருவேளை மக்களுக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைத்தால் உடனடியாக பதவி விலக வேண்டும். அது தான் தமிழக மக்களுக்கு அவர் செய்யும் மிகப்பெரிய நன்மையாக இருக்கும். அதை அவர் உடனே செய்ய வேண்டும்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது மக்களுக்காக நான் செய்த பணிகள் என்ன? முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்த பணிகள் என்ன? என்பது குறித்தும் முதல்வருடன் விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன். முதல்வர் குறிப்பிடும் நாளில், குறிப்பிடும் இடத்தில் விவாதத்தை நடத்திக் கொள்ளலாம். இதற்கு தயாரா? என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவிக்க வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x