Published : 21 Aug 2014 12:00 AM
Last Updated : 21 Aug 2014 12:00 AM

3 ஆண்டாக கல்வி உதவித்தொகை நிறுத்தம்: பீடித்தொழிலாளர்களின் குழந்தைகள் தவிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 லட்சம் பீடித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக முக்கூடலை சேர்ந்த பீடித்தொழிலாளி மகன் ‘உங்கள் குரல்’ பகுதியில் தனது வேதனையை பதிவு செய்திருந்தார்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 6 லட்சம் பீடித் தொழிலாளர்களில், திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 5 லட்சம் பேர் இருக் கிறார்கள். கன்னியாகுமரி, வேலூர், ஈரோடு உள்ளிட்ட பிற மாவட்டங்களில் 1 லட்சம் பேர் வரை இருக்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலப்பாளையம், பேட்டை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, முக்கூடல், அம்பாசமுத்திரம், ஆலங் குளம், பாவூர்சத்திரம், சுரண்டை, சேரன்மகாதேவி, தென்காசி, புளியங்குடி, சேர்ந்தமரம், களக்காடு என்று பீடித்தொழிலாளர்களின் குடும்பங்கள் பரவலாக இருக் கின்றன.

ரூ. 5,000 வரை

இத்தொழிலாளர்களின் 2 குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி 1-ம் வகுப்பு முதல் பட்டமேற்படிப்பு வரை பீடித்தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி பயில ரூ.300 முதல் ரூ. 5 ஆயிரம் வரை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்தது. உதவித் தொகை அந்தந்த மாணவ, மாணவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். இதனால் இவர்கள் பிள்ளைகளின் கல்வி தடைபடாமல் தொடர்ந்தது.

திருப்பி அனுப்பினர்

இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக இந்த கல்வி உதவித் தொகை பீடித் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்பட வில்லை. இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வரும் மாவட்ட பீடித்தொழிலாளர் சங்க பொதுச் செயலர் எம். வேல்முருகன் கூறும்போது, ‘கடந்த 2012-13-ம் ஆண்டுக்கு மாவட்டத்தில் பீடித்தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்க ரூ.14 கோடி அனுமதிக்கப்பட்டு வரப்பெற்றி ருந்தது.

ஆனால், அத்தொகையை வழங்காமல் அரசுக்கு திருப்பி அனுப்பியிருந்தனர். இது தெரியவந்ததும் போராட்டத்தில் ஈடுபட்டோம். இதையடுத்து அத்தொகை தற்போது வரப்பெற்றுள்ளது. அதில் பாதி தொகையை வழங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

ரூ.16 கோடி தேவை

2013-14-ம் கல்வியாண்டுக்கான கல்வி உதவியாக ரூ.15 கோடி தேவை என்று மத்திய அரசுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடிதம் அனுப்பியிருப்பதாக சொல் கிறார்கள். ஆனால் அத்தொகை வரப்பெறவில்லை. இதுபோல், 2014-15-ம் கல்வியாண்டுக்கு ரூ.8 கோடி மட்டுமே வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கல்வி உதவித் தொகையாக வழங்க ரூ.16 கோடி வரை தேவைப்படுகிறது.

இதுபோன்று பல்வேறு பிரச்சினைகளும் இந்த விவகாரத்தில் நீடிக்கிறது. பீடித்தொழிலாளர்களின் பிள்ளை களுக்கு கல்வி உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று மாவட்டத்தில் 10 இடங்களில் நாங்கள் போராட்டங்கள் நடத்தி யிருக்கிறோம்’ என்றார் அவர்.

வட்டிக்கு கடன்

கடந்த 3 ஆண்டுகளாக கல்வி உதவித் தொகை கிடைக்கப் பெறாமல் பீடித்தொழிலாளர்கள் மிகுந்த பொருளாதார சிக்கல்களை சந்தித்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளின் படிப்பு பாதியில் நின்றுவிடக்கூடாது என்று, வட்டிக்கு கடன் வாங்கி கல்வி கட்டணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரிகளிடமும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களிடமும் குரல் எழுப்ப உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் முன்வராதது குறித்து பீடித்தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகையை தடையின்றி வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பீடித் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x