Published : 26 Jul 2018 11:14 AM
Last Updated : 26 Jul 2018 11:14 AM

திமுக தலைவராக பொறுப்பேற்று கருணாநிதியின் 50- வது ஆண்டு பொன்விழா: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

 திமுக தலைவராக பொறுப்பேற்று கருணாநிதி பொறுப்பேற்று 50 -வது ஆண்டான பொன்விழாவை தொண்டர்கள் கொண்டாட வேண்டும் என, அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை எழுதிய கடிதத்தில், “என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் கருணாநிதியின் பொன்விழா கொண்டாட்ட மடல்.

இனம்-மொழி உரிமைகள் காக்க பகுத்தறிவுச் சிந்தனையுடனும், சுயமரியாதை உணர்வுடனும் திமுக எனும் அரசியல் பேரியக்கத்தை தமிழ் மக்களுக்காக உருவாக்கிய அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, கட்சியையும் ஆட்சியையும் தன் தோளில் சுமக்கும் பொறுப்பை ஏற்றவர் நம் அருமைத் தலைவர் கருணாநிதி. 1969 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் நாள் திமுக தலைவராக அவர் பொறுப்பேற்றார்.

அண்ணா காலம் வரை திமுகவுக்குத் தலைவர் பதவி இல்லை. நான் கண்ட தலைவரும், கொண்ட தலைவரும் பெரியார் ஒருவரே என்றுரைத்து, அந்தப் பதவியை தனது தலைவரான பெரியாருக்குக் காலியாக விட்டுவிட்டு, கழகப் பொதுச்செயலாளராக அண்ணா பொறுப்பு வகித்தார்.

அவரது மறைவுக்குப் பிறகு, திமுகவை எப்படியும் வீழ்த்திவிடலாம் என இன எதிரிகள் பகல் கனவு கண்டிருந்த வேளையில், தமிழர் நலன் காக்கும் இயக்கமான திமுக வலிமையுடன் இருக்க வேண்டுமென்றால் தலைவர் பொறுப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதை திமுக நிர்வாகிகள் பலரும் வலியுறுத்த, அந்தப் பொறுப்புக்குத் தலைவர் கருணாநிதி தான் பொருத்தமானவர் என்பதை பெரியாரே வெளிப்படையாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, திமுக சட்டத்திட்டங்களில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு, உள்கட்சி ஜனநாயக மரபுகளையொட்டி, கருணாநிதி முறைப்படி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 49 ஆண்டுகள் நிறைவுற்று, 50 ஆம் ஆண்டு தொடங்குகிறது.

ஓர் மாபெரும் மக்கள் இயக்கத்தின் தலைவராகப் பொன்விழா காணும் வாய்ப்பு, இந்திய அரசியல் வரலாற்றில் இணையேதுமில்லாத சாதனைகள் பல புரிந்த தலைவரான நம் அருமைத் தலைவருக்கே வாய்த்திருக்கிறது.

இந்தச் சாதனை எளிதாக அமைந்துவிடவில்லை. எத்தனையோ காட்டாறுகள், எண்ணற்ற நெருப்பாறுகள், கணக்கிலடங்கா துரோகங்கள், எதிர்கொள்ளவே முடியாத நெருக்கடிகள், அதிசயிக்கத்தக்க வெற்றிகள், அதல பாதாளத்தில் தள்ளிய தோல்விகள் என அனைத்தையும் கடந்து, திமுக எனும் இந்த இயக்கத்தை ஆலமரமாக வளர்த்து அனைவரையும் அன்னாந்து பார்க்க வைத்த பெருமை தலைவர் கருணாநிதிக்கே உரியது.

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, கழகத்தில் பிளவு ஏற்பட்டு கட்சியிலும் ஆட்சியிலும் பிளவு ஏற்பட்டு கலைந்து கலகலத்துப் போய்விடாதா என டெல்லி ஏகாதிபத்தியம் முதல் தமிழ்நாட்டு அரசியல் பிரமுகர்கள் வரை கணக்குப் போட்டுக் களிப்பில் ஆழ்ந்திருந்த நிலையில், தலைவர் கருணாநிதியின் அர்ப்பணிப்பும் அயராத உழைப்பும் அர்ச்சுன வியூகமும், திறமையான- செம்மையான ஆட்சி நிர்வாகத்தை வழங்கியதுடன், திமுகவையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பெரும் வளர்ச்சியடையச் செய்தது.

இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையிலான குடிசை மாற்று வாரியம், பிற்படுத்தப்பட்டோருக்குத் தனி இலாகா, கை ரிக்ஷா ஒழிப்பு, கண்ணொளித் திட்டம், நிலச் சீர்திருத்தம் என முன்னோடித் திட்டங்களை, திராவிட இயக்கத்தின் உயிர்மூச்சுக் கொள்கையான சமூக நீதியின் அடிப்படையில் வெற்றிகரமாகச் செயல்படுத்தியவர் தலைவர் கருணாநிதி.

அதனால்தான் 1971 ஆம் ஆண்டு அவர் தலைமையில் தேர்தல் களத்தைச் சந்தித்த திமுக தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் இதுவரை எந்தக் கட்சியும் பெற்றிராத வகையில் 184 தொகுதிகளில் வெற்றி பெற்று சரித்திர சாதனை நிகழ்த்தியது.

இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைக்கும் இந்த மகத்தான வெற்றிக்குப் பிறகுதான், மாநில சுயாட்சித் தீர்மானம், கச்சத்தீவை தாரை வார்ப்பதைத் தடுக்கும் தீர்மானம், பொதுவாழ்வில் இருப்போர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் சட்டம் உள்ளிட்டவற்றை நிறைவேற்றினார் தன்னிகரற்ற தலைவரும்-தனித்துவமான முதல்வருமான கருணாநிதி.

தலைவர் கருணாநிதியின் ஜனநாயக வழியிலான மாநில உரிமை முழக்கங்களும் சமூக நீதி சார்ந்த திட்டங்களும் இன எதிரிகளின் கண்களை உறுத்தின. எப்படி அவரை வீழ்த்தலாம் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நெருக்கடி நிலைக்காலம் துணை நின்றது. நெருக்கடி நிலைக்கு எதிராக நெஞ்சுரத்தோடு தீர்மானம் நிறைவேற்றி, அதனை பொதுமக்கள் முன்னிலையில் உறுதிமொழியாக ஏற்ற தீரம் நிறைந்த செயலை தலைவர் கருணாநிதி மேற்கொண்டதால், திமுக ஆட்சி கலைக்கப்பட்டு ஜனநாயகப் படுகொலை நிகழ்த்தப்பட்டது.

திமுகவினர் இரவோடு இரவாக ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டனர். உங்களில் ஒருவனான நான் உள்பட தலைவர் கருணாநிதியின் மனசாட்சியாக விளங்கிய முரசொலி மாறன், திமுகவின் முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் வெஞ்சிறைக் கொடுமைக்குள்ளானோம். அந்த கொடூரத் தாக்குதலில் சென்னை மாநகரத்தின் முன்னாள் மேயரான சிட்டிபாபு என்னுயிர் காக்க, தன்னுயிர் ஈந்த தியாக மறவராகி நெஞ்சில் நிலைத்திருக்கிறார்.

தனது உடன்பிறப்புகள்-குடும்பத்தினர் எனப் பலரும் சிறைக்கொடுமைக்குள்ளான நிலையிலும் மனம் தளராமல், நெருக்கடி நிலையை எதிர்த்து நின்று, சென்னை அண்ணா சாலையில் தன்னந்தனியாக உரிமைக்குரல் எழுப்பி, துண்டுப் பிரசுரங்களை வழங்கிய போராளிதான் நம் தலைவர் கருணாநிதி.

ஏறத்தாழ 13 ஆண்டுகாலம் கழகத்தால் ஆட்சிப் பொறுப்புக்கு வர முடியாத சூழலிலும், இயக்கத்தைக் கட்டிக்காத்து அதன் வலிமையைப் பெருக்கி, தமிழினம் காக்கவும்-மக்கள் நலன் பேணவும்-தமிழ் மொழி உரிமையை மீட்கவும் போராட்டக்களங்களைக் கண்டு சிறைவாசத்தை இன்முகத்துடன் ஏற்றவர் தலைவர் கருணாநிதி. இந்தி ஆதிக்கத்திற்கு எதிரான சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் கைதாகி, சிறைச்சாலையில் அரைக்கால் சட்டையும் கட்டம் போட்ட சட்டையும் அணிவிக்கப்பட்டு, தட்டும் குவளையும் கொடுத்து முன்னாள் முதல்வரான அவரை இழிவுபடுத்தியபோதும், தாய்மொழிக்காக அதை புன்முறுவலுடன் ஏற்று, மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை என முழங்கியவர் அவர்.

1989-ல் திமுக மீண்டும் மக்களின் பேராதரவுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, பெண்களுக்குச் சொத்துரிமை, மிக பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீதத்தை உள்ளடக்கிய 69% இடஒதுக்கீடு எனப் பல சாதனைகளைப் புரிந்ததுடன், இந்தியாவின் பிரதமராக இருந்த சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கிடம் வலியுறுத்தி காவிரி நடுவர் மன்றத்தை அமைத்ததிலும், மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நாடு முழுதும் நடைமுறைப்படுத்தி இந்திய அளவில் திராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கையை நிலைநாட்டியதிலும் தலைவர் கருணாநிதியின் பங்கு மகத்தானது.

அப்படிப்பட்ட திமுக அரசைத்தான் சில சுயநலமிகள் ஒன்றுசேர்ந்து பொய்ப்பழி சுமத்தி 1991-ல் கலைத்தனர். ஆளுநராக இருந்த சுர்ஜித்சிங் பர்னாலா கையெழுத்திட மறுத்தபோதும், அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனுக்கு அழுத்தம் தரப்பட்டு, முதல்முறையாக Otherwise என்பது பிரயோகிக்கப்பட்டு, ஆட்சிக் கலைப்பு எனும் ஜனநாயகப் படுகொலைக்கு இரண்டாவது முறையாக உள்ளானது திமுக.

அதன்பிறகு நடந்த பொதுத்தேர்தல் நேரத்தில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொடூரமான முறையிலே படுகொலை செய்யப்பட, அரசியல் லாபங்களுக்காக திமுகவின் மீது வீண்பழி சுமத்தப்பட்டு, திமுகவினர் மீதும் அவர்களின் உடைமைகள் மீதும் நடத்தப்பட்ட கொடுந்தாக்குதலையும் மனதிடத்துடன் எதிர்கொண்டார் தலைவர் கருணாநிதி. 1991 தேர்தல் களத்தில், ராஜீவ்காந்தி படுகொலை எனும் வீண்பழியால் திமுகவுக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே கிடைத்தது. துறைமுகம் தொகுதியிலிருந்து தலைவர் கருணாநிதி மட்டும் கரையேறினார். அந்த நிலையிலும், திமுகவைக் கட்டிக்காத்தவர் அவர்.

ஆட்சியைவிட கட்சியே அவருக்கு முதன்மையானது. செங்கோலைப் பறித்தாலும் அவருடைய எழுதுகோலைப் பறித்துவிடமுடியாது. அந்த எழுதுகோல் வாயிலாக ஒவ்வொரு நாளும் தன் உடன்பிறப்புகளை அவர் சந்தித்தார்.

அறிவாலயத்திலும், பொதுக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் திருமண நிகழ்வுகளிலும் பரப்புரைப் பயணங்களிலும் திமுக தொண்டர்களின் முகம் காண்பதுதான் தலைவர் கருணாநிதியின் பெரும்பலம்.

தான் வேறு, தன் உடன்பிறப்புகள் வேறு என்று அவர் நினைத்ததே இல்லை. 1996, 2006 தேர்தல் களங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோதும், 2001, 2011, 2016 தேர்தல் களங்களில் வெற்றிவாய்ப்பை இழந்தபோதும் அவர் திமுக தொண்டர்களாம் உடன்பிறப்புகளைத்தான் நினைத்திருந்தார். இயக்கத்தை அவர் இயக்குகிறாரா, இயக்கம் அவரை இயக்குகிறதா எனப் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்குத் தலைவர் பொறுப்பில் தலைமைத் தொண்டனாகச் செயல்படுபவர் கருணாநிதி.

1957-ல் குளித்தலையில் தொடங்கி 2016-ல் திருவாரூர் வரை 13 தேர்தல் களங்களிலும் தோல்வியே காணாத வரலாற்று நாயகர் அவர். தமிழ்நாட்டை அதிக ஆண்டுகாலம் ஆட்சி செய்து, அரும்பெரும் திட்டங்களை வழங்கிய வழிகாட்டி தலைவர் அவர். எத்தனை பிரதமர்கள், எத்தனை குடியரசுத் தலைவர்கள், மத்திய ஆட்சியாளர்களுக்கு எத்தனை ஆலோசனைகள் அத்தனையும் திமுக தலைவர் என்ற முறையிலே தலைவர் கருணாநிதி எடுத்த முடிவுகள்.

ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டு அரசியலை சுழல வைக்கும் அச்சாணியாக அரை நூற்றாண்டு காலமாகத் திகழ்பவர் தலைவர் கருணாநிதிதான்.

டெல்லிப் பட்டணத்துத் தலைவர்களை தென்னகம் நோக்கித் திருப்பிய சூத்திரதாரி. அவருடைய கோபாலபுரம் இல்லம், இந்திய அரசியலின் போக்கைத் தீர்மானித்த அரசியல் முகாம். இந்திய அளவில் எத்தனையோ உயர்பொறுப்புகள் அவரைத் தேடி வந்தபோதும், என் உயரம் எனக்குத் தெரியும் எனத் தன்னடக்கத்துடன் தெரிவித்து, தமிழ்நாட்டையும் தன் உடன்பிறப்புகளையுமே கண்களாகக் கருதி, திமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர் தலைவர் கருணாநிதி.

பொதுவாழ்வில் 80 ஆண்டுகள், முரசொலி பத்திரிகை நிறுவனராக பவளவிழா, கலைத்துறையில் 70 ஆண்டுகள், சட்டப்பேரவை பணிகளில் வைர விழா ஆகியவற்றைக் கடந்து ஓய்வறியாமல் உழைத்த அவருக்கு, காலம் சற்று ஓய்வளித்திருக்கிறது. முதுமையின் காரணமாக அவரது உடல்நலம் குன்றியிருக்கிறது. அரை நூற்றாண்டு காலமாக திமுக தலைவர் என்ற முறையில், என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே எனப் பொங்கும் பெருங்கடலெனத் திரண்ட தமிழ் மக்களை நோக்கி ஒலித்த அந்த காந்தக் குரலை எப்போது கேட்போம் என ஒவ்வொருவரும் ஏங்கித் தவிக்கிறோம்.

காலமும், மருத்துவ அறிவியலும் நம் ஏக்கத்தைத் தணிக்கும் என்ற நம்பிக்கையுடன் தலைவர் கருணாநிதி வகுத்துத்தந்த பாதையில் திமுக பயணிக்கிறது. தலைவர் கருணாநிதியின் நெஞ்சில் திமுகவின் ஒவ்வொரு உடன்பிறப்பும் இருக்கிறார்கள். ஒவ்வொரு உடன்பிறப்பின் நெஞ்சிலும் தலைவர் கருணாநிதி இருக்கிறார்.

இந்தப் பிரிக்க முடியாத சொந்தமும் பந்தமும்தான் அரை நூற்றாண்டுகால அரசியல் தலைமையின் மகத்துவமான தனித்துவம். எப்போதும் இதயத்தில் நிறைந்திருக்கும் தலைவர் கருணாநிதியின் தலைமைப் பொறுப்பின் பொன்விழாவைப் போற்றிக் கொண்டாடுவோம்! அவரது லட்சியப் பாதையில்-ஜனநாயக வழியில் தொடர்ந்து தொண்டாற்றி, திமுக அரசை விரைவில் அமைப்போம்! அந்த வெற்றியை தலைவர் கருணாநிதிக்குக் காணிக்கையாக்கி, பொன்விழா நாயகரின் புகழைப் புவியெங்கும் எதிரொலிக்கப் பாடிப் பூரிப்படைவோம்” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x