

தமிழகத்தில் 35 லட்சம் ஏக்கர் பரப்பிலான பயிர்களை காப்பீடு செய்யும் வகையில், பயிர் காப்பீடு திட்டம் ரூ.841 கோடி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக வேளாண் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது: வேளாண் விளைபொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் விவசாய உற்பத்தி நிறுவனங்கள், உணவு தயாரிப்பு வணிக அமைப்புகள், தனிநபர்கள் 500 பேருக்கு ரூ.50 லட்சம் செலவில் ஏற்றுமதி திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். விவசாயிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்படும். குறுகியகால கடன் தேவைக்காக ரூ.3 ஆயிரம் கோடி மூலதன கடன் அளிக்கப்படும். விவசாய நிலமற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு வெள்ளாடு, செம்மறி ஆடு வாங்கவும், பராமரிக்கவும் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாய மூலதன கடன்கள் வழங்கப்படும்.
பருத்தி உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்க, பருத்தி சாகுபடி திட்டம் கடந்த 2021-22 முதல் செயல்படுத்தப்படுகிறது. வரும் நிதி ஆண்டிலும் ரூ.12.21 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
இயற்கை சீற்றங்களால் நஷ்டமடையாமல் விவசாயிகளை பாதுகாக்கும் பயிர் காப்பீடு திட்டம் வரும் ஆண்டில், 35 லட்சம் ஏக்கர் பரப்பிலான பயிர்களை காப்பீடு செய்யும் வகையில், ரூ.841 கோடி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
வரும் ஆண்டில் முதல்முறையாக, நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்து ரகங்களின் தரமான சான்று விதைகள், பிற இடுபொருட்கள் ஆகியவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
கரும்புக்கு சிறப்பு ஊக்கத்தொகை: ஒரு டன் கரும்புக்கு மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ள நியாயமான மற்றும் ஆதாய விலை ரூ.3,151-க்கு மேல், ரூ.349 சிறப்பு ஊக்கத் தொகையாக உயர்த்தி, டன்னுக்கு ரூ.3,500 வழங்கப்படும். இதனால், 1.30 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவார்கள். இதற்கு ரூ.297 கோடி ஒதுக்கப்படும். புதிய கரும்பு ரகங்களை விவசாயிகள் அதிக பரப்பில் சாகுபடி செய்யவும், சாகுபடி செலவை குறைக்கவும் கரும்பு விதை கரணைகள், நாற்றுகள் போன்றவற்றை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க மத்திய, மாநில அரசு நிதியில் இருந்து ரூ.10.53 கோடி ஒதுக்கப்படும்.
சேலம் மாவட்டம் கொளத்தூர், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி, கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் உள்ளிட்ட 10 இடங்களில் வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கட்டமைப்பு வசதிகள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஜி.அரியூர் துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பரிவர்த்தனை கூடம் ஆகியவை ரூ.50.79 கோடியில் மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன் அமைக்கப்படும்.
ஆன்லைனில் உழவர் சந்தை: 9 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் தலா 1,000 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள் ரூ.20 கோடியில் அமைக்கப்படும். அதிக வரத்து உள்ள 50 உழவர் சந்தைகள் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.8 கோடியில் மேம்படுத்தப்படும். உழவர் சந்தை காய்கறிகளை மக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் முறையில் பெற்றுக்கொள்ளும் விதமாக, மாவட்ட தலைமையிடங்களுக்கு அருகே உள்ள உழவர் சந்தைகள் உள்ளூர் இணைய வர்த்தக தளத்துடன் இணைக்கப்படும்.
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் வேளாண் விளைபொருட்களை இருப்பு வைக்கும் விவசாயிகள், வணிகர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பொருளீட்டு கடன் வசதி, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும்.
5 பொருட்களுக்கு புவிசார் குறியீடு: வரும் ஆண்டில் நல்லூர் வரகு (கடலூர்), வேதாரண்யம் முல்லை (நாகப்பட்டினம்), ஆயக்குடி கொய்யா (திண்டுக்கல்), நத்தம் புளி (திண்டுக்கல்), கப்பல்பட்டி கரும்பு முருங்கை (திண்டுக்கல்) ஆகிய 5 வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.15 லட்சம் ஒதுக்கப்படும்.
முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் 1,000 இடங்களில் அமைக்கப்படும். ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பிலான இந்த மையங்களை அமைக்க, 30 சதவீத மானியமாக ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும். இதற்கு மாநில நிதி ரூ.42 கோடி ஒதுக்கப்படும். பயிர் சாகுபடி பரப்பை அதிகரித்து, உணவு தானிய உற்பத்தியை உயர்த்த டெல்டா அல்லாத மாவட்டங்களில் விவசாயிகளுக்கு சிறப்பு தொகுப்பு வழங்கப்படும். நெல் இயந்திர நடவு மானியம், தரமான சான்று பெற்ற விதைகள் உள்ளிட்டவற்றுக்கு ரூ.102 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதேபோல், டெல்டா மாவட்டங்களிலும் விவசாயிகளுக்கு சிறப்பு தொகுப்பு வழங்கப்படும். நெல் இயந்திர நடவு மானியம், தரமான சான்று பெற்ற விதைகள் உள்ளிட்டவற்றுக்கு ரூ.58 கோடி ஒதுக்கப்படும்.
கோடை விவசாயத்துக்கு ரூ.24 கோடி: தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், கோடை விவசாயம் பரவலாக குறைந்துள்ளது. தமிழகத்தில் 56.41 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் பருவமழையை மட்டுமே ஆதாரமாக கொண்டு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. வரும் ஆண்டில் 3 லட்சம் ஏக்கர் பரப்பில் கோடை விவசாயம் செய்ய, ஹெக்டேருக்கு ரூ.2.000 வீதம் மானியம் வழங்க, மாநில நிதி ரூ.24 கோடி ஒதுக்கப்படும்.
63 ஆயிரம் மலைவாழ் விவசாயிகள் பயனடையும் வகையில், குறுதானிய சாகுபடி, இடுபொருள் விநியோகம், காய்கறி பயிர்களில் பரப்பு விரிவாக்கம், வேளாண் இயந்திரங்கள், நுண்ணீர் பாசனம், ஒருங்கிணைந்த மதிப்பு கூட்டுதல், பண்ணையம் போன்றவற்றுக்கு மானியம் வழங்க ரூ.22.80 கோடி ஒதுக்கப்பட்டு, 20 மாவட்டங்களில் மலைவாழ் விவசாயி முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு விவசாயி கடன் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ், நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு, விபத்து உயிரிழப்புக்கான இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும், விபத்தால் ஏற்படும் உறுப்பு இழப்புக்கான நிதியுதவி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாகவும், இயற்கை மரணத்துக்கான நிதியுதவி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாகவும், இறுதிச்சடங்கு செய்வதற்கான நிதியுதவி ரூ.2,500-ல் இருந்து ரூ.10 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும். இதனால், விளிம்பு நிலையில் உள்ள நிலமற்ற விவசாய தொழிலாளர்களின் குடும்ப நலன் பாதுகாக்கப்படும்.