Published : 16 Jul 2018 04:44 PM
Last Updated : 16 Jul 2018 04:44 PM

சித்தா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நடைபெறும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நடைபெறும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி ஆகிய இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, தமிழ்நாட்டில் இதுவரை பிளஸ் 2 தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு கல்வியாண்டுகளிலும் மத்திய அரசு இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு நீட் தேர்வைப் பின்பற்ற அறிவுறுத்தியது. அதற்கு தமிழக அரசு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

மாநில அரசின் கொள்கை ரீதியான எதிர்ப்பையும் மீறி, தமிழ்நாடு தொழில்முறை கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான சட்டம் 2006-ன் பிரிவுகளுக்கு முரணாக, நீட் தேர்வை இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு அறிமுகப்படுத்த முடியாது என்ற தனது உறுதியான நிலைப்பாட்டை தமிழக அரசு, மத்திய அரசுக்கு ஏற்கெனவே தெளிவாக தெரிவித்துள்ளது.

மேலும், தற்போதுள்ள இந்திய மருத்துவ முறை மத்திய குழு சட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கான எந்தவொரு திருத்தத்தையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பதும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதனையும் கருத்தில் கொண்டு, முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், இந்திய மருத்துவ முறை மற்றும் ஓமியோபதி கல்லூரிகளில், பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முதல்வர் தலைமையிலான இந்த ஆய்வுக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயகுமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x