

ஈரோடு: முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க, தமிழக முதல்வருடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்தார்.
ஈரோடு சிக்கைய நாயக்கர் கல்லூரியில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பார்வைக்கு ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு சிக்கைய நாயக்கர் கல்லூரியை அரசு கல்லூரி ஆக்க முடிவெடுத்து தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஜனாதிபதி ஒப்புதல் பெற்றுள்ளது.
அதோடு, இந்த கல்லூரி வளாகத்தில் ஐஏஎஸ் அகாடமி மற்றும் உள் விளையாட்டு அரங்கம், நூலகம் அமைக்க முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அது சம்பந்தப்பட்ட தகவல்களை ஆய்வு செய்ய என்னை பணித்தார். அதன்படி இன்று ஆய்வு செய்து உரிய அறிக்கையை, அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு விரைவில் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
உயர் கல்வியை பொருத்தவரை தமிழகம் இந்தியாவிலேயே முன்னோடியாக திகழ முதல்வர் பல நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால், ஆளுநர் அதற்கு முட்டுக்கட்டை போடுவது போல் செயல்படுகிறார். சமீபத்தில் பல்கலைக்கழக மானிய குழு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. அது மாநிலங்களுக்கு எதிராக உள்ளது. எனவே தமிழகம் மற்றும் கேரளா, ஆந்திரா முதல்வர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் நீதிமன்றத்திலும் அந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம். விரைவில் அதில் வெற்றி பெறுவோம். வரும் ஏப்ரல் மாதம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. ஒவ்வொரு வருடமும் 6 மாசத்துக்கு ஒரு முறை அத்தேர்வு நடைபெறும். அதன் பிறகு பல்கலைக்கழக ஆசிரியர்கள் பணி நியமனம் சம்பந்தமான தேர்வு நடைபெற உள்ளது.
சுமார் 4000 பேராசிரியர்கள் வரும் ஜூன் மாதம் நியமிக்க உள்ளோம். அதை தவிர 1000 கௌரவ விரிவுரையாளர்களை நிரந்தர படுத்த திட்டமிட்டுள்ளோம். ஈரோட்டில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக முதுகலை ஆராய்ச்சி மையத்தை மூடும் திட்டமில்லை. பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்திலும் காவல்துறையாலும் விசாரிக்கப்படுகின்றன. எனவே, அது குறித்து கருத்து கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, எம்பிக்கள் அந்தியூர் செல்வராஜ், பிரகாஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.