

புதுச்சேரி மாநிலம் உருளையன்பேட்டை தொகுதியின் சுயேச்சை எம்எல்ஏ நேரு (எ) குப்புசாமி. மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தின் நிறுவனரான இவர், 2011-ல் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர்.
அப்போது அரசு கொறடாவாக 5 ஆண்டு காலம் இருந்தவர், அடுத்த தேர்தலில் அதே தொகுதியில் நின்று தோற்றுப் போனார். 2021-ல் என்.ஆர்.காங்கிரசை விட்டு விலகி சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற நேரு, ரங்கசாமி முதல்வராக வருவதற்கு ஆதரவளித்தார். ஆனால், முதல்வர் ரங்கசாமியை ஆதரித்தாலும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியின் தவறுகளை சுறுக் சுறுக் என்று சுட்டிக்காட்டினார். தடாலடி போராட்டங்களிலும் குதித்தார். இன்றளவும் அது தொடர்கிறது.
அண்மையில் பேரவைத் தலைவர் செல்வத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் அளித்த நேரு, கடந்த 12-ம் தேதி சட்டப் பேரவை கூட்டம் கூடியபோது இதனை வலியுறுத்தி பேரவைக்குள்ளேயே போராட்டம் நடத்தினார். இதனால் பேரவைத் தலைவர் அவரை சஸ்பெண்ட் செய்தார். ஆனாலும் ஆக்ரோஷம் குறையாமலே இருக்கிறார் நேரு.
அரசுக்கு ஆதரவளித்துக் கொண்டு அரசுக்கு எதிராகவே இப்படி அதிரடிகளை கிளப்புவது முரண்பாடு இல்லையா? என்று நேருவிடம் கேட்டதற்கு, “திருத்தம்... நான் ரங்கசாமிக்குத்தான் ஆதரவு அளிக்கிறேன். ஆளும் அரசுக்கு இல்லை. பாஜக-வுடன் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி வெச்சது பிடிக்காமல்தான் நான் சுயேச்சையாக போட்டியிட்டேன்.
தேர்தலில் வெற்றிபெற்ற ரங்கசாமி கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தார். அந்த நேரத்தில் பாஜக-வை சேர்ந்த ஒருவரை முதல்வராக்க சதி நடந்தது. அதற்கு சுயேச்சைகள் உள்ளிட்ட எம்எல்ஏ-க்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். அந்த நேரத்தில் நான் ரங்கசாமிக்கு ஆதரவளித்து பாஜக முதல்வர் வருவதை தடுத்தேன்.
புதுச்சேரி முழுவதும் இப்போது சட்டவிரோத செயல்களும் பாலியல் வன்முறைகளும் அதிகரித்து வருகிறது. தொட்டது அனைத்திலும் ஊழல். அமைச்சர்களே தைரியமாக ஊழல் செய்கின்றனர். புதிய மதுபான கொள்கைக்கு எதிராக நான் தான் முதலில் பேரவையில் குரல் எழுப்பினேன்.
ஊழலற்ற புதுச்சேரியை உருவாக்க வேண்டும், மக்களுக்கான பணிகள் துரிதமாக நடக்க வேண்டும், அரசும் அதிகாரிகளும் ஊழலில் இருந்து விலகி நிற்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஒரே குறிக்கோள். அந்த எண்ணத்தில் தான் சமூக அமைப்புகளுடன் இணைந்து அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறேன்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது. உப்பனாறு வாய்க்கால் பாலம் புதுச்சேரியின் அவமானச் சின்னமாக காட்சியளிக்கிறது. மாநிலத்தில் 18-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இருந்தாலும் எவரும் பொதுவெளியில் வருவதில்லை; மக்களுக்குத் தேவையான பணிகளை செய்வது கிடையாது.
ஃபெஞ்சல் புயலின்போது ஆட்சியரை தவிர ஐஏஎஸ் அதிகாரிகள் யாரும் வெளியே வரவில்லை. ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவதால் பாஜக எம்எல்ஏ-க்கள் என்னை ஆதரிப்பதில்லை. பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு அளித்ததால் அவர்கள் என்னிடம் பேசினர்.
புதுச்சேரியில் இதுவரை எந்தவொரு பேரவைத் தலைவரும் செய்யாததை செல்வம் செய்கிறார். நான் சேவை செய்யவே அரசியலுக்கு வந்தேன். ஆளும் அரசை எதிர்ப்பதால் எந்தவித ஆதாயமும் எனக்கு இல்லை. தமிழகத்தில் திமுக-வினர் பாஜக-வை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்கின்றனர். ஆனால் இங்கு, பாஜக கூட்டணி அரசை எதிர்க்க துணிவில்லாத எதிர்கட்சியாக திமுக உள்ளது. இங்குள்ள ஆட்சிக்கு எதிர்க்கட்சி தான் முட்டுக்கொடுத்துக் கொண்டு நிற்கிறது” என்றார்.