Published : 25 Aug 2014 12:08 PM
Last Updated : 25 Aug 2014 12:08 PM

தூத்துக்குடி, திருநெல்வேலி மாநகராட்சிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

தூத்துக்குடி, திருநெல்வேலி மாநகராட்சிகளை மேம்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ள நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பு:

மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப மாநகராட்சிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு மாநகராட்சி பகுதிகளுக்கு இணையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதிலும் எனது தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், தெரு விளக்குகள், கட்டடங்கள் என 445 அடிப்படை வசதிப் பணிகள் 413 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி மாநகராட்சியில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் 282 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளான அத்திமரப்பட்டி, மீளவிட்டான், முத்தையாபுரம், சங்கரப்பேரி, தூத்துக்குடி புறநகர் ஆகிய 5 பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதன் அடிப்படையில், தூத்துக்குடி மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 29.74 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே போன்று, சுகாதாரக் கேடுகளை கட்டுப்படுத்தும் வகையிலும், நிலத்தடி நீர் மாசுபடுவதைத் தடுக்கும் வகையிலும், தூத்துக்குடி மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள் மற்றும் விடுபட்ட பகுதிகளில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில், கடந்த மூன்று ஆண்டுகளில் 327 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான குடிநீர் திட்டப்பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மை பணிகள் என 63 அடிப்படை வசதிப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருநெல்வேலி மாநகராட்சியின் நீர் ஆதாரம் மற்றும் குடிநீர் பகிர்மான கட்டமைப்பினை மேம்படுத்தும் வகையில், 230 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் கோரப்படும்.

இதனைத் தொடர்ந்து, பாதாள சாக்கடை திட்டம் இல்லாத மாநகராட்சிப் பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் தாமிரபரணி ஆறு மாசுபடுவதைத் தடுக்கும் வகையில், திருநெல்வேலி மாநகராட்சியின் விடுபட்ட பகுதிகளுக்கு, 490 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது மட்டுமல்லாமல், திருநெல்வேலி மாநகராட்சியின் 8 வார்டுகளில் குடிநீர் மேம்பாட்டு பணிகளால் சேதமடைந்துள்ள 61 கிலோ மீட்டர் நீளச் சாலைகள் 35 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மறு சீரமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், திருநெல்வேலி மாநகர பொதுமக்கள் மற்றும் இம்மாநகருக்கு வந்து செல்லும் பயணிகளின் நலனை கருத்திற் கொண்டு, திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தினை நவீனமயமாக்குதல் மற்றும் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பணிகள் நிறைவேற்றப்படுவதன் மூலம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகளைச் சார்ந்த மக்களின் கூடுதல் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதோடு, சுகாதாரமான சுற்றுச்சூழல் நிலவவும் வழிவகை ஏற்படும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x