

மதுரை: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மேலூர் வரை நீட்டிக்க கோரிய வழக்கில், வருங்காலங்களில் திட்டம் விரிவுபடுத்தும் போது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த பி.ஸ்டாலின், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், தென் மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு மதுரை மாவட்டத்துக்கு வருகின்றனர். இதனால் மதுரையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து, போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது.
இதற்கு தீர்வு காணும் நோக்கில் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தில் மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 32 கிலோ மீட்டர் தூரத்தில் 27 நிலையங்கள் அமைகிறது.திட்டத்தில் 2-ம் கட்டத்தில் மதுரை விமான நிலையத்தை இணைக்கும் வகையில் விமான நிலையம் முதல் கட்டப்புலி நகர் மற்றும் மணலூர் முதல் நாகமலை புதுக்கோட்டை வரையில் 2 கூடுதல் வழித்தடங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் ஒத்தக்கடை முதல் மேலூர் வரையிலான பகுதியை பரிசீலிக்க அதிகாரிகள் தவறிவிட்டனர். மேலூர் பகுதியில் 50,000-க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். விவசாய உற்பத்தியை மையமாக கொண்ட பகுதியாகவும் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், மாணவர்கள், விற்பனையாளர்கள், அரசு, தனியார் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் மாற்று போக்குவரத்து தேவை அவசியமாக உள்ளது.
மேலூரில் இருந்து மதுரைக்கு நான்கு வழிச்சாலையில் பயணம் செய்யும் போது ஏராளமான விபத்துகள் நடைபெறுகின்றன. இப்பகுதியில் கடந்த 2015 முதல் 2023 வரை 1195 விபத்துக்களில் 386 பேர் உயிரிழந்துள்ளனர். இவற்றை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் திட்டத்தை மேலூர் வரை நீட்டிக்க அதிகாரிகளிடம் மனு அளித்தேன். இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மேலூர் வரை நீட்டிக்க உத்தரவிட வேண்டும், என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், மெட்ரோ ரயில் திட்டம் அரசின் கொள்கை முடிவுடன் தொடர்பானது. இருப்பினும் வருங்காலத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்கும் போது ஒத்தக்கடையில் இருந்து மேலூருக்கு திட்டத்தை நீட்டிப்பது குறித்த மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் எனக்கூறி மனுவவை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.