

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் இரு வேறு பேருந்து நிறுத்தங்களில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் உட்பட 39 பேரை தெரு நாய்கள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபாளையம் நகராட்சியில் தெரு நாய்கள் தொல்லையால் குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதால், தெரு நாய்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை புதிய பேருந்து நிலையம் சாலையில் உள்ள ஜவகர் மைதானம் பேருந்து நிறுத்தம் மற்றும் தென்காசி சாலையில் உள்ள சொக்கர் கோயில் பேருந்து நிறுத்தம் ஆகியவற்றில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகளை தெரு நாய்கள் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அப்பகுதியில் தெருக்களில் நடந்து சென்றவர்களையும் தெரு நாய்கள் துரத்திச் சென்று கடித்ததில் 39 பேர் காயமடைந்தனர். அவர்களில் 7 பேர் தீவிர காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து இன்று காலை முதல் கால்நடைத்துறை உதவி இயக்குநர் ராஜராஜேஸ்வரி, நகர் நல அலுவலர் டாக்டர் பரிதா வாணி தலைமையில் பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை பிடித்து தடுப்பூசி செலுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மாரியப்பன் கூறுகையில், “நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை 39 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இது குறித்து சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார். மேலும், நகர் நல அலுவலர் பரிதா வாணி கூறுகையில், “தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றார்.