Published : 11 Jul 2018 09:01 AM
Last Updated : 11 Jul 2018 09:01 AM

புறநகர் பகுதிகளில் ஏரிகளை இணைக்க ரூ.84 கோடியில் பாதாள மூடு கால்வாய் பணி தொடக்கம்

ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் குடியிருப்புகளுக்கு செல்வதைத் தடுக்க ரூ.86 கோடி யில் பாதாள மூடு கால்வாய் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதன்மூலம் புறநகர் பகுதிகளில் ஏரிகள் இணைக்கப்படவுள்ளன.

சென்னை புறநகர் பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் நடைபெற்று வந்தது. அதனால் எவ்வளவு மழை பெய்தாலும், கால்வாய்கள் மற்றும் விவசாய நிலங்கள் வழியாக ஏரி களுக்கு தண்ணீர் சென்றடைந்து விடும். தற்போது விவசாய நிலங்கள் குடியிருப்புகளாக மாறியதால், மழைநீர் ஏரிகளுக்கு சென்று சேர்வதில் சிக்கல் நீடிக் கிறது. இதனால் குடியிருப்புகளுக்குள் அந்த நீர் புகுந்து உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்படு கிறது.

கடந்த, 2015 மற்றும், 2016-ம் ஆண்டுகளில் பெய்த கன மழையின்போது சென்னை புறநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. கால்வாய்களின் மீது இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சீரமைப்பு பணிகள் நடந்தன. மேலும் பல இடங்களில் பட்டா நிலம், சாலைகள் இருப்பதால் ஏரிகளை இணைப்பதில் சிக்கல் இருந்தது. இதனையடுத்து இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண ரூ.1,950 கோடியில் பாதாள மூடு கால்வாய் திட்டத்தைப் பொதுப்பணித் துறையினர் தயாரித்தனர்.

இந்த திட்டத்தின்படி சாலை யின் கீழ் பகுதியில் கால்வாய் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு ஏரிக்கும் இணைப்பு கொடுக்கப் படும். இதனால் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் குடியிருப்புகளுக்குள் செல்வது தடுக்கப் படும். தற்போது முதல் கட்டமாக ரூ.84 கோடியில் இந்த பணிகளைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆதனூர், சிட்லபாக்கம், சேலையூர், நாராயணபுரம் போன்ற ஏரிகளை, மற்ற ஏரிகளுடன் இணைக்கும் வகையில் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. இதற்காக அளவீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஏரியில் இருந்து வெளியேறும் நீர் மற்ற ஏரிகளுக்கு செல்லும் வகையில் பாதாள மூடு கால்வாய் அமைக்கும் திட்டம் (கட் அண்ட் கவர்) தயாரிக்கப்பட்டது. தற் போது முதல் கட்டமாக மழைக் காலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளைக் கண்டறிந்து முன்னுரிமை அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தாம்பரம் இரும்புலியூர் ஏரியில் இருந்து வெளியேறும் மழை நீர், நேரடியாக அடையாற்றில் செல்லும் வகையில், தாம்பரம்- மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் பாதாள மூடு கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. பெருங்களத்தூர் பகுதியில் இருந்து வெளியேறும் நீர், பாப்பான் கால்வாய்க்கு செல்லும் வகையிலும், அதே போல் சேலையூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் சிட்லபாக்கம் வழியாக செம்பாக் கம் ஏரிக்கும் செல்லும் வகை யிலும், நாராயணபுரம் ஏரியில் இருந்து வெளியேறும் நீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு செல்லவும், ஆதனூர் ஏரியையும் அடையாற்றையும் இணைக்கும் வகையில் இந்த பாதாள மூடு கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த கால்வாய், 4 அடி அகலமும், 2.5 அடி ஆழமும் கொண்டதாக இருக்கும். தற்போது இந்த திட்டத்தைச் செயல்படுத்த அனைத்து பணிகளும் தொடங்கியுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x