Last Updated : 07 Jan, 2025 02:55 PM

 

Published : 07 Jan 2025 02:55 PM
Last Updated : 07 Jan 2025 02:55 PM

‘டங்ஸ்டன்’ திட்டத்தை ரத்து செய்யக் கோரி மேலூர் விவசாயிகள், பொதுமக்கள் பேரணி

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய கோரி 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நடைபயண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை: ‘டங்ஸ்டன் ’ திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக் கோரி, அரிட்டாபட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள், 15 கி.மீ நடைபயண போராட்டம் நடத்தி வருகின்றனர். கிராம மக்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டத்தால், சிட்டம்பட்டி சுங்கச்சாவடி துவங்கி தல்லாகுளம் தபால் நிலையம் வரை கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மதுரை மேலூர் அருகே அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, அ.வல்லாளபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் அடங்கிய சுமார் 5 ஏக்கரில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளித்தது. இதற்கு அப்பகுதி மக்கள், விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி கிராமமக்கள், விவசாயிகள் மட்டுமின்றி அரசியல் கட்சியினரும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில் மேலூர் பகுதி ஒரு போக பாசன விவசாயிகள் மற்றும் மேலூர் தொகுதி மக்கள் ஒன்றிணைந்து மதுரை ,திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள சிக்கம்பட்டி டோல்கேட் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் நடை பயணமாக சென்று தல்லாகுளம் மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தனர். இதன்படி செவ்வாய்க்கிழமை காலை சுமார் 10 மணி அளவில் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்.

அங்கிருந்து நடை பயணம் செல்ல முயன்ற போராட்டக்காரர்களிடம் மதுரை காவல்துறை எஸ்பி அரவிந்த் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களை வாகனங்களில் சென்று மத்திய தபால் நிலையத்தில் போராட்டம் நடத்துமாறு வலியுறுத்தினர். ஆனாலும் விவசாயிகள் பொதுமக்கள் அதை கேட்கவில்லை. நடை பயணமாகவே சென்று மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்வோம் என்று உறுதியாக கூறிவிட்டனர். இதனால், போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தள்ளு முள்ளும் ஏற்பட்டது

இந்த நிலையில் காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து தங்களது நடை பயணத்தை தொடங்கினர். வழி நெடுகிலும் ஆங்காங்கே திரண்டு இருந்த விவசாயிகள், பொதுமக்களும் நடை பயணத்தில் இணைந்து கொண்டனர். வேளாண்மை கல்லூரி ஒத்தக்கடை, உத்தங்குடி,மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மாட்டுத்தாவணி வழியாக தல்லாகுளம் மத்திய தபால் நிலையம் நோக்கி சென்றனர். அவர்கள் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

மேலூர் பகுதியில் இத்திட்டத்தை கொண்டு வரக்கூடாது. இத்திட்டத்தை முழுமையாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் ஓயாது. இத்திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யவில்லை என்றால் இன்னொரு ஜல்லிக்கட்டு போராட்டமாக மாறும். விவசாயிகள் இளைஞர்கள் பெண்களை மாணவர்களை திரட்டி தமிழகம் முழுவதும் இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

நடைபயணத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழிநெடுகிலும் ஆங்காங்கே குளிர்பானம், உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. நடை பயணத்தை ஒட்டி சித்தம்பட்டி டோல்கேட் முதல் தல்லாகுளம் மத்திய தபால் நிலையம் வரையிலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மதுரை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலூர் தொகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் தன்னெழுச்சியாக பங்கேற்ற இந்த நடை பயண போராட்டம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x