Published : 18 Jul 2018 09:56 PM
Last Updated : 18 Jul 2018 09:56 PM

எட்டு வழிச்சாலை குறித்து மக்கள் கருத்தைக் கேளுங்கள்: ரஜினிக்கு கமல் பதில்

எட்டு வழிச்சாலையை ஆதரித்த ரஜினிகாந்த் முதலில் மக்களிடம் சென்று பேச வேண்டும். பிறகு அவர் கருத்து தெரிவிக்கலாம் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமலஹாசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

''அயனாவரத்தில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது தவறு. சிறுமிகளின் பாதுகாப்பு நலனில் மெத்தனமாக இருந்து விட்டோமோ என்ற பதட்டம் ஏற்படுகிறது. 'மகாநதி' என்ற படத்தை எடுத்துவிட்டுக் கடமை முடிந்து விட்டதாகக் கூறமுடியாது.

இன்னும் யதார்த்த வாழ்க்கையில் அப்படி நடந்துவிடாமல் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களும குடும்பத்திற்கு தெரிந்தவர்களும் இதுபோன்ற காரியங்களில் ஈடுப்பட்டுள்ளதாக நிரூபணமாகி உள்ளது.

யாரோ கதவை உடைத்துக்கொண்டு வந்து கள்வன் செய்கின்ற வேலை இல்லை இது. சிறுமி மீது நடந்த பாலியல் சம்பவம் மன்னிக்க முடியாத குற்றம். இதில் ஈடுப்பட்டவர்களை அடித்துக் கொன்றுவிட்டால் அது இன்னொரு கொலையாக மாறிவிடும். நீதிமன்றங்களுக்கு வேலையில்லாமல் போய்விடும்.

ஆனால், இந்த விவகாரத்தில் நீதி விரைவாகச் செயல்படவேண்டும். நின்று கொல்வதெல்லாம் நீதிக்கு ஆகாது. எல்லாரும் பாய்ந்து தோலை உரித்து உப்புக் கண்டம் போடவேண்டும் என்பது புராதன விஷயம். சட்டம் அதற்கான தண்டனைகளை வகுத்து வைத்து இருக்கிறது. இருப்பதில் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும். இவர்களுக்கு மனிதாபிமானம் காட்ட வேண்டிய அவசியமில்லை.

மாற்றுத்திறனாளியான அந்தச் சிறுமிக்கு நேர்ந்த துயரம், தமிழர்களாக தலைகுனிவு ஏற்படுத்தும் செயலாக உள்ளது. சட்டத்துக்குட்பட்டு கடுமையான தண்டனையை விரைவாக நீதிமன்றம் வழங்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீதும் சட்டத்தின் மீதும் நம்பிக்கை வரும்.

தமிழகத்தில் ஊழல்கள் அதிகமாக இருப்பதால் தான் நான் கட்சியைத் தொடங்கி உள்ளேன். இதுவரை தமிழகத்தில் நடந்த ரெய்டு முலம் அகப்பட்ட பணமும், தங்க நகைகளும் என்ன ஆனது. அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன என்பதை பற்றி ஒரு பேச்சும் இல்லையே?

வருமான வரிச் சோதனை நமக்காக நடப்பதாக வைத்துக்கொண்டாலும் அதில் என்ன நடப்பது என்பது தெரிவிக்க வேண்டாமா? தெரிவிப்பது கடமையில்லையா? கிணற்றில் போட்ட கல்லாக எத்தனை நாட்கள் இருக்க முடியும். வருமான வரித்துறை சோதனை கண் துடைப்பாக இருக்கலாம் என்று சந்தேகப்படும் அளவிற்கு வந்துவிட்டது. இதை நிவர்த்தி செய்யவேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.

வருமான வரிச் சோதனை முலம் அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்ற என்பதை முறியடிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இருந்தால் விளக்கம் அளிக்க வேண்டும்.

சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தை ரஜினிகாந்த் ஆதரித்துள்ளார். அவர் மக்களிடம் முதலில் பேசவேண்டும். எட்டு வழிச் சாலை இல்லாததால் எங்கள் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று யாராவது சொன்னார்களா? சேலம்-சென்னைக்கு இடையே இந்த ஒரு சாலைதான் உள்ளதா? வெவ்வேறு பாதைகள் இருக்கின்றன.

அவைகள் இதைவிட குறைந்த செலவில் விரைந்து முடிக்க வழிகள் இருக்கின்றன. பல அரசியல் தலைவர்கள் கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள். அவற்றை எல்லாம் கேட்காமல் இப்படிதான், இது தான் என்று மக்களை வற்புறுத்த முடியாது''.

இவ்வாறு கமல் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x