பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளி, கல்லூரிகளில் மதிய உணவு திட்டம் தொடக்கம்

பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளி, கல்லூரிகளில் மதிய உணவு திட்டம் தொடக்கம்
Updated on
1 min read

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மதிய வழங்கும் திட்டத்தை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் வியாழக்கிழமை (இன்று) காலை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தில் 2022-23-ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா காலைச் சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பழநியில் உள்ள பழனியாண்டவர் மெட்ரிக் பள்ளி, தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தொடக்கப்பள்ளி, பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி, பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, பழநி சின்னக்கலையம்புத்தூர் மற்றும் ஒட்டன்சத்திரம் பழனியாண்டவர் மகளிர் கல்லூரியில் படிக்கும் 4,000 மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டம் கடந்த 2022 நவ.16-ல் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில், காலை சிற்றுண்டி வழங்குவது போல், மதிய உணவும் வழங்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று வியாழக்கிழமை (டிச.26) காலையில் மதிய உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநியைத்துறை முதன்மை செயலர் சந்திரமோகன், ஆணையர் ஶ்ரீதர், கூடுதல் ஆணையர் ஹரிப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பழநி அருகே சின்னக்கலையம்புத்தூர் பழனியாண்டவர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பழநி கோயில் தக்கார் கார்த்திக், இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி, பழநி நகராட்சி துணைத் தலைவர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in