Published : 03 Jul 2018 07:55 AM
Last Updated : 03 Jul 2018 07:55 AM

எம்பிபிஎஸ், பொது பிரிவு கலந்தாய்வு தொடங்கியது: முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் எம்எம்சி-யை தேர்வு செய்தனர்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கியது. தரவரிசைப் பட்டியலில் மாநில பாடத்திட்டத்தில் படித்த 3 பேர் உட்பட முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரியை (எம்எம்சி) தேர்வு செய்தனர்.

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. கலந்தாய்வில் கலந்து் கொள்ளுமாறு 609 பேருக்கு (நீட் மதிப்பெண் 676 முதல் 444 வரை) அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. 580 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். 29 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை. கலந்தாய்வில் 572 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், ஒருவருக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடத்தில் சேர்வதற்கான அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது. இன்று நடைபெறும் இரண்டாம் நாள் பொதுப் பிரிவு கலந்தாய்வில் பங்கேற்குமாறு 819 பேருக்கு (நீட் மதிப்பெண் 443 முதல் 393 வரை) அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 6-ம் தேதி மதியம் வரை பொதுப் பிரிவு கலந்தாய்வு நடக்கிறது. 6-ம் தேதி மதியத்தில் இருந்து, 7-ம் தேதி வரை இடஒதுக்கீடு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. 7-ம் தேதியுடன் முதல்கட்ட கலந்தாய்வு நிறைவடைகிறது. அரசு இடங்களுக்கான கலந்தாய்வு முடிந்தப் பின்னர், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான 723 எம்பிபிஎஸ், 645 பிடிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

தருமபுரி மாணவர்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் அரசு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 25,417 பேர் இடம்பெற்றிருந்தனர். தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்த சென்னை மாணவி கே.கீர்த்தனா (நீட் மதிப்பெண் 676) டெல்லி எய்ம்ஸில் படிக்க இடம் கிடைத்ததால், அங்கு சென்றுவிட்டார். 3, 5, 6, 7, 8, 9, 10, 12 உள்ளிட்ட பல்வேறு இடங்களை பிடித்தவர்கள் அகில இந்திய ஒதுக்கீடு மூலம் பல மருத்துவக் கல்லூரிகளிலும், எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்ந்துவிட்டனர்.

இதனால், தரவரிசைப் பட்டியலில் 2-ம் இடம் பிடித்திருந்த தருமபுரி மாவட்டம் பொம்முடியைச் சேர்ந்த ஆர்.ராஜ் செந்தூர் அபிஷேக் (நீட் மதிப்பெண் 656) முதலிடத்துக்கு வந்தார். இதேபோல் தரவரிசைப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் இருந்தவர்களும் முன்னேறி வந்தனர்.

எம்எம்சி தேர்வு

அதன்படி தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த ஆர்.ராஜ் செந்தூர் அபிஷேக் (நீட் மதிப்பெண் 656), முகமது சாய்ப் ஹசன் (நீட் மதிப்பெண் 644), ஆர்.எஸ்.சுப்ரஜா (நீட் மதிப்பெண் 613), எஸ். சபரீஷ் (நீட் மதிப்பெண் 610), அனகா நிடுகலா ஷியாம்குமா (நீட் மதிப்பெண் 610), ஸ்ரீஷ் செந்தில் குமார் (நீட் மதிப்பெண் 607), எம்.தினகர் (நீட் மதிப்பெண் 606), ஆல்பிரட் விவியன் ஆல்வின் (நீட் மதிப்பெண் 604), எச்.சதீஷ் (நீட் மதிப்பெண் (நீட் மதிப்பெண் 604), ஜே.ஜோஸ்வா அஜய் (நீட் மதிப்பெண் 602) ஆகிய மாணவ, மாணவிகள் பிடித்தனர். இந்த மாணவ, மாணவிகளும் கலந்தாய்வில் சென்னை மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்தனர். இவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான அனுமதி கடிதத்தை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x