Published : 09 Jun 2018 09:38 AM
Last Updated : 09 Jun 2018 09:38 AM

இ-சேவை மையங்களில் 4 நாட்களாக சர்வர் பழுது: சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் அவதி

காஞ்சி மாவட்டம் முழுவதும் அரசு இ-சேவை மையங்களில் கடந்த நான்கு நாட்களாக சர்வர் பழுதால் சான்றிதழ் பெற முடியாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், ஒன்றிய அலுவல கம் கிராம ஊராட்சி அலுவலகம் மற்றும் வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசின் இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் கடந்த நான்கு நாட்களாக சர்வர் பழுதாகியுள்ளது. மேலும், பணியாளர்கள் பற்றாக்குறையும் உள்ளது. இதனால் பொதுமக்கள் சான்றிதழ் பெற அவதிப்படுகின் றனர்.

மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளின் படிப்புக்காக வருமான சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றுகள் வாங்குவதற்காகவும், மேலும், விதவை, முதியோர் உதவித்தொகை சான்றிதழ் உட்பட பல் வேறு சான்றிதழ்களைப் பெறுவதற்கு விஏஓ, ஆர்ஐ, தாசில்தார் அலுவலகம் என அலைவதைத் தவிர்க்க, அரசு சார்பில் இ-சேவை மையங்கள் திறக்கப்பட்டன. மேலும், இந்த இ-சேவை மையங்களில் மேற்கண்ட அனைத்து சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இ-சேவை மையங்களில் அடிக்கடி சர்வர் பழுதாகி விடுவதால் அனைத்து மையங்களிலும் பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால், குறித்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகளில் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க முடியாமல் பொதுமக்கள், மாணவர்கள் திணறி வருகின்றனர். பதிவு செய்ய முடியாதவர் கள் தினமும் இ-சேவை மையத்துக்கு அலைந்து திரிந்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இ-சேவை மைய நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ``கடந்த நான்கு நாட்களாக மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சர்வர் பழுதாகியுள்ளது. அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறோம். விரைவில் நிலைமை சீராகும் என்று நினைக்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x