Published : 27 Aug 2014 12:15 PM
Last Updated : 27 Aug 2014 12:15 PM

தபால்தலை, ரூபாய் நோட்டில் விநாயகர்!

ஆகஸ்ட் 29-ம் தேதி விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட ஒவ்வொருவரும் தயாராகிக் கொண்டிருப்பீர்கள்.

ஆனால், இந்து மதம் பெரிதும் பரவியிருக்காத வெளிநாடுகளில் விநாயகரின் உருவம் பொறித்த தபால்தலை, ரூபாய் நோட்டுகள், நாணயங்களை வெளியிட்டுள்ளது ஆச்சரியமான செய்தி. இதுகுறித்து, மதுரை தபால் தலை சேகரிப்போர் சங்க உதவி தலைவர் ஜி. சக்திவடிவேல் கூறும்போது, விநாயகர் வழிபாடு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இருந்துள்ளது. இப்போதும் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் இந்துமத கடவுள்களை வழிபட்டு வருகின்றனர். நேபாளம், தாய்லாந்து மற்றும் லாவோஸ் நாடுகள் வெளியிட்ட தபால் தலையில் விநாயகர் உருவம் உள்ளது. இதில் லாவோஸ் என்பது, பர்மா, வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சிறிய தீவு நாடாகும். சில நாடுகளின் ரூபாய் நோட்டுக்களிலும் விநாயகர் இடம்பிடித்துள்ளார்.

தாய்லாந்து நாட்டின் 10 பாட் நாணயத்தில் விநாயகர் உருவம் உள்ளது. அதேபோல, இந்தோனேசியாவில் 20,000 ரூபாய் தாளிலும் விநாயகர் படம் உள்ளது. சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளால் ஆன இந்தோனேசியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடாகும்.

அங்கு 2 சதவிகிதத்திற்கும் குறைவான மக்களே இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள். இருப்பினும், அந்நாட்டில் இந்துக்கள் அதிகம் வாழ்கிற பாலி தீவில், செல்வத்தின் அதிபதியாக விநாயகர் கருதப்படுகிறார். எனவே, இந்தோனேசிய அரசு விநாயகர் உருவம் பதித்த ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது.

சோழ மன்னர்களின் படையெடுப்பே காரணம்

லாவோஸ் நாட்டில் விநாயகருக்கு மட்டுமின்றி சரஸ்வதி, பிரம்மா, நாககன்னிக்கும் தபால்தலை வெளியிடப் பட்டுள்ளது. ராஜராஜசோழன், ராஜேந்திர சோழ மன்னர்களின் படையெடுப்புகளும், பிற்காலத்தில் வணிகத் தொடர்புகளுமே தெற்காசிய நாடுகளில் இந்து கலாச்சாரம் பரவக் காரணம்” என்றார். கே.கே.நகரில் வசிக்கும் ஜி.சக்திவடிவேல், ரோஜா மலர், காந்திஜி போன்ற படங்கள் இடம்பெற்ற நூற்றுக் கணக்கான தபால் தலைகளை சேகரித்து வைத்துள்ளார். இதுதவிர வெவ்வேறு நீள அகலங்களைக் கொண்ட தபால்தலைகள், வட்டம், நீள்வட்டம், அறுங்கோணம் வடிவ தபால்தலைகளை சேகரித்து வைத்துள்ளார். விதவிதமான அலங்கார கள்ளிச்செடிகளை வளர்ப்பது, வித்தியாசமான மது பாட்டில்களை சேகரிப்பது போன்றவற்றிலும் இவருக்கு ஆர்வம் அதிகம். அவரது தொடர்பு எண்: 98421 24515

வாபஸ் பெறப்பட்ட விநாயகர்!

இந்தோனேசியா உருவ வழிபாட்டை கடுமையாக எதிர்க்கும் மக்கள் அதிகம் கொண்டநாடு என்பதால், அங்கு விநாயகர் உருவத்துடன் ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பின்னாட்களில் அரசே அவற்றை திரும்பப் பெற்றுவிட்டது. எனவே, விநாயகர் படம் பொறித்த இந்தோனேசிய ரூபாய் நோட்டு அரிய பொக்கிஷமாகி விட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x