Published : 27 Jun 2018 04:31 PM
Last Updated : 27 Jun 2018 04:31 PM

போக்குவரத்து போலீஸாரிடம் சிக்கிய நடிகர் ஜெய்; அதிக சத்தம் எழுப்பிய கார் சைலன்ஸர்: தவறை உணர்ந்து தானே காணொலி வெளியிட்டார்

தனது சொகுசு காரில் அதிக சப்தத்தை ஏற்படுத்தும் சைலன்ஸர் வைத்து ஓட்டியதால் மீண்டும் போக்குவரத்து போலீஸாரிடம் சிக்கிய நடிகர் ஜெய் தானே அதற்கு எதிராக பிரச்சாரமும் செய்து வெளியிட்ட காணொலி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ஜெய் போக்குவரத்து போலீஸாரிடம் சிக்குவது இரண்டாவது தடவை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் தேதி 'கோவா-2' படம் வெளியானதை கொண்டாட நடிகர் அபினவ், பிரேம்ஜியுடன் பார்ட்டியில் கலந்துக்கொண்ட நடிகர் ஜெய் தனது ஆடி காரில் மதுபோதையில் வீடு திரும்பினார். குடிபோதையில் காரை ஓட்டி பாலத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். அவர் மேல் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் நடிகர் ஜெய் விசாரணைக்கு ஆஜராகாததால், சைதாப்பேட்டை நீதிமன்றம் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது.

இதை தொடர்ந்து நடிகர் ஜெய், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். காலையிலிருந்து மாலை வரை ஜெய்யை நிற்கவைத்த மாஜிஸ்ட்ரேட் ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்ததுடன் ரூ.5200 அபராதமும் விதித்தார்.

இது பழைய கதை இந்தமுறை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் ஜெய் தனது சொகுசு காரில் அதிக அளவிலான சப்தம் வரும் சைலன்ஸர் அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ஓட்டிவந்து சிக்கினார். நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் அதிக சத்தத்துடன் ரேஸ் கார் பாணியில் சைலன்ஸ் அமைத்து கார் ஒன்று வேகமாக சென்றதை பார்த்த போக்குவரத்து ஆய்வாளர் அந்த காரை துரத்தி மடக்கி பிடித்தார்.

காரின் ஓட்டுநரை காரைவிட்டு இறங்கச்சொல்லி பார்த்தபோது அது நடிகர் ஜெய் என தெரிய வந்தது. இதையடுத்து அவரது காரில் உள்ள சைலன்ஸர் மாற்றப்பட்டது சட்டப்படி குற்றம் என தெரிவித்த போலீஸார் அவருக்கு எச்சரிக்கை விடுத்து சைலன்ஸரை மாற்றச்சொன்னார்கள்.

இதை பாடமாக எடுத்துக்கொண்ட நடிகர் ஜெய் வீடியோவாக இதை நான் மக்களுக்கான மெசேஜாக சொல்லிவிடுகிறேன் என்று சொல்லி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் தனது காரை ஸ்டார்ட் செய்ய சொல்லி அதன் சப்தத்தை சுட்டிக்காட்டும் ஜெய் “இது மாதிரி சவுண்ட் அதிகம் வைத்தால் போக்குவரத்து போலீஸார் உடனே பிடிப்பார்கள். இன்றைக்கு மீட்டிங் இதுபோன்ற சவுண்ட் வரும் கார்களை பிடித்து பறிமுதல் செய்ய வேண்டும் என்பது தான் இன்று உத்தரவு.

ஆகவே இது போன்ற அதிக சத்ததுடன் சென்றீர்களானால் பொதுமக்கள், மருத்துவமனைகள், பறவைகள், குழந்தைகள் என பலருக்கும் பாதிப்பு, ஆகவே இது மாதிரி சத்தம் ஏற்படுத்தும் சைலன்ஸரை பொருத்தி ஓட்டக்கூடாது. அப்படி வந்தால் கார் பறிமுதல் செய்யப்படும். ஆகவே சரியான சைலன்ஸ்ருடன் ஓட்டுங்க அதிக சத்தம் வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்” என்று ஜெய் கூறுகிறார்.

ஜெய்யின் வீடியோ முகநூலில் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. கூடவே போக்குவரத்து போலீஸாரையும் நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர். சாதாரண ஆட்கள் சிக்கினால் அபராதம் நடிகர் சிக்கினால் விடுவிப்பா என்ன நியாயம் என்று சிலரும், சைலன்ஸர் மாற்றும் வரை காரை காவல் நிலையத்தில் வைக்க வேண்டும், ஆனால் ஜெய்யை செல்ல போலீஸார் எப்படி அனுமதிக்கலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

பலரும் சாதாரண மக்களுக்கு ஒரு நியாயம் வசதி உள்ளவனுக்கு ஒரு நியாயமா என ஒரே கேள்வியை பலவிதங்களில் எழுப்பியுள்ளனர். சிலர் நாங்களும் இதேபோல் ஹெல்மட் போடாமல், லைசென்ஸ் இல்லாமல் வந்து காணொலியில் பொதுமக்களுக்கு இவ்வாறு அறிவுரை கூறுகிறோம் அனுப்பிவிடுவீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டியன் நடிகர் ஜெய்க்கு ₹1500 அபராதம் விதித்துதான் அனுப்பியுள்ளார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x