Published : 11 Aug 2014 10:00 AM
Last Updated : 11 Aug 2014 10:00 AM

பழுதடைந்த சாலைகள்: சென்னையில் பொதுமக்கள் கடும் அவதி

சென்னையில் எழும்பூர், சேப்பாக்கம், பெரம்பூர், அடையாறு, நந்தனம் உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து சாலைகளும் உள் சாலைகளும் மோசமான நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எழும்பூர் நெடுஞ்சாலை, ஹால்ஸ் சாலை, கென்னட் லேன், சேப்பாக்கம் பெல்ஸ் சாலை, சி.என்.கே.சாலை, மீர்சாகிப் பேட்டை மார்க்கெட் பகுதி, ராயப்பேட்டை ஷேக் தாவூது தெரு போன்ற பல பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. குறிப்பாக பெல்ஸ் சாலையில் மேடு பள்ளங்கள் நிறைந்திருப்பதால் பஸ்கள் கவிழ்ந்துவிடும் வகையில் ஆபத்தாக செல்கின்றன. அங்கு அன்னை கஸ்தூரி பாய் காந்தி மகப்பேறு மருத்துவமனைக்கு வாகனங்களில் வரும் கர்ப்பிணிகள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ரபீக் என்பவர் கூறும்போது, “ கடந்த ஓர் ஆண்டாக இங்கு சாலைகளை தோண்டுவதும், மூடுவதுமாகவே உள்ளனர். முறையாக சாலைகளை செப்பனிட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார்.

பெரம்பூர் பிரதான சாலை

பெரம்பூரின் பிரதான சாலைகளில் ஒன்றான ராகவன் சாலை, கடந்த 10 ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் உள்ளது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பெரம்பூரின் பிரதான சாலைகளாக பேப்பர் மில்ஸ் சாலையும் மாதவரம் நெடுஞ்சாலையும் விளங்குகின்றன. இந்த இருசாலைகளையும் இணைக்கும் முக்கிய சாலையாக ராகவன் சாலை உள்ளது. ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சாலை வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இச்சாலை கடந்த 10 ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் உள்ளதால் எங்கு பார்த்தாலும் மேடு பள்ளமாக காட்சியளிக்கிறது. இச்சாலையை கடந்து செல்ல மிகுந்த சிரமப்படவேண்டியுள்ளதாக அதைப் பயன்படுத்தும் இருசக்கர வாகனஓட்டிகள் கூறுகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக பயன்படுத்தவே முடியாத சாலையாக இது மாறிவிடுகிறது.

இதுகுறித்து அங்குள்ள பொதுமக்கள் கூறும்போது, “இந்த சாலை தார்க்கலவையைப் பார்த்தே ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் நாங்கள் படும் துன்பம் சொல்லி மாளாது. உயரதிகாரிகள் நேரில் வந்து பார்த்தால்தான் பிரச்சினையின் தீவிரம் புரியும். மேலும் கடந்த 3 ஆண்டுகளாக மெட்ரோ வாட்டர் ஊழியர்கள் ஆங்காங்கே தோண்டி பராமரிப்புபணிகளை மேற்கொண்டதால் சாலை நெடுகிலும் ஆபத்தான குழிகள் உள்ளன. 4 பள்ளிகள் அமைந்துள்ள இந்த தெருவில், மாணவர்கள் தினசரி படும் வேதனை சொல்லி மாளாது” என்றனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “கடந்த சில ஆண்டுகளாக ராகவன் சாலையில் நடந்துவந்த மெட்ரோ வாட்டர் குழாய் பதிப்புப் பணி முடிவடைந்துவிட்டது. அவர்கள் தடையின்மைச் சான்று கொடுத்துவிட்டனர். அதனால் ராகவன் தெருவில் புதிய சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும். அருகில் உள்ள உட்புறச்சாலைகளுக்கும் தார் போடும் பணி விரைவில் தொடங்கும்” என்றனர்.

அடையாறு இந்திரா நகர்

அடையாறு இந்திரா நகரில் உட்புறச் சாலைகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அவதிப்படுகிறார்கள். இந்திரா நகரில் 15வது குறுக்குதெரு, 13வது குறுக்கு தெரு, முதல் குறுக்கு சந்து, ஆறாவது குறுக்கு தெரு உட்பட பல்வேறு தெருக்களில் உள்ள சாலைகள் பழுதடைந்துள்ளன. சில மணி நேரம் மழை பெய்தாலே இச்சாலைகளில் நீர் தேங்குகிறது. இதனால் சாலையின் எந்தப் பகுதியில் குழி இருக்கிறது என்று தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் அதிக சிரமப்படுகின்றனர்.

வெங்கட்ரத்தினம் நகரில் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை அருகே மழைநீர் குளம்போல தேங்கியிருக்கிறது. இப்பகுதிக்கு ஆட்டோவில் வருவது கூட கடினமாக இருப்பதால் மருத்துவமனைக்கு வருபவர்கள் சிரமப்படுகிறார்கள். இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள மழலையர் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளும் பள்ளிக்கு நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் வாணி கூறும்போது, “எனது குழந்தை யு.கே.ஜி.படிக்கிறாள். சாலை ஒழுங்காக இல்லாததால் அவளை நடத்தி அழைத்துச்செல்ல முடியவில்லை. அதே நேரம், பள்ளி புத்தகப்பை, சாப்பாட்டுக் கூடையுடன் அவளை தூக்கிக்கொண்டு நடப்பதும் கஷ்டமாக இருக்கிறது” என்றார்.

இது குறித்து 175வது வட்ட கவுன்சிலர் க.கோகிலாவிடம் கேட்டபோது, “இந்திரா நகரில் 15வது குறுக்கு தெரு உள்ளிட்ட மூன்று இடங்களில் மழைநீர் கால்வாய்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 3வது அவென்யூவில் உள்ள கால்வாய்களை பிரதான கால்வாயோடு சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

நான்கு தெருக்களில் சிமென்ட் சாலைகள் போட அனுமதி கிடைத்துள்ளது. மேலும் சில தெருக்களில் சிமென்ட் சாலைகள் அமைக்க மதிப்பீடு தயாராக உள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த பணிகள் முடிக்கப்படும்” என்றார்.

பெல்ஸ் சாலை

சாலையின் மோசமான நிலை குறித்து, மாநகராட்சி 114 வது வார்டு இளநிலை பொறியாளரிடம் கேட்டபோது, `பெல்ஸ் சாலையை பொறுத்தவரை, அங்கு குடிநீர் வாரிய பணிகள் முடிந்ததும் சாலைகள் அமைத்தோம். ஆனால் கீழே இறங்கி விட்டது. எனவே மீண்டும், பேருந்து போக்குவரத்து சாலைகள் மூலம், கான்கிரீட் அல்லது தார் சாலை போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்,’என்றார்.

கெனால் வங்கி சாலை

நந்தனம் கெனால் வங்கி சாலையில் தேங்கிய கழிவு நீரால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சென்னை நந்தனம் கெனால் வங்கி சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதிலிருந்து கழிவு நீர் வெளியேறத் தொடங்கியது. இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பாதாளச் சாக்கடையில் இருந்து பெருமளவு நீர் வெளியேறி தெரு முழுவதும் குளம்போல தேங்கி நின்றது. வீட்டை விட்டு மக்கள் வெளியேவர முடியாமல் தவித்தனர்.

இதனால் கொதிப்படைந்த மக்கள் அடுத்தடுத்து புகார் அளித்ததைத் தொடர்ந்து ஞாயிற்று கிழமை மாலையில் அப்பகுதிக்கு அதிகாரிகள் பணியாளர்களுடன் வந்தனர். தேங்கியிருந்த கழிவு நீரை அகற்றும் முயற்சியிலும், அடைப்பை சரிசெய்யும் வேலையிலும் ஈடுபட்டனர். வருங்காலங்களில் இதுபோன்று மீண்டும் நீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகாரி விளக்கம்

சென்னையில் நடந்துவரும் சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:

மாதவரம் பால்பண்ணை பகுதி, வளசரவாக்கம் பகுதி ஆகியவற்றில் சாலைகளை போடுவதில் அனைத்து தரக் கட்டுப்பாட்டு விதிகளும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் தயாராகி வரும் தார் சாலைகளுக்காக தரக் கட்டுப்பாட்டு கையேட்டின் படி, தார் சாலைகளில் தரையிலிருந்து 23.66 மி.மீ கீழ் மணல் போன்ற பொருள் இருக்க வேண்டும்.

இதுபோன்ற பல தரக் கட்டுப்பாடுகள் உதவி பொறியாளர்களுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. பழுதடைந்த பழைய சாலைகளை மாநகராட்சி சீர் செய்து வருகிறது. முறையாக போடப்படும் புதிய சாலைகள் உடனே பழுதடைந்தால் பொது மக்கள் மாநகராட்சிக்கு புகார் தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x