Published : 13 Jun 2018 08:45 PM
Last Updated : 13 Jun 2018 08:45 PM

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோட்டையை நோக்கி பேரணி: திடீர் சாலை மறியல் குண்டுக்கட்டாக கைது

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் திடீரென கோட்டையை முற்றுகை நடத்தினர், கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி எழிலக வளாகத்தில் நேற்று முன்தினம் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். தமிழக முதல்வர் தங்களை அழைத்துப் பேச மறுத்து வருவதை கண்டித்தும், உடனடியாக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடனும் மூன்று நாட்களாக போராடி வருகின்றனர்.

இவர்களது பிரச்சினை குறித்து திமுக சட்டப்பேரவையில் குரல் எழுப்பியபோது அரசுக்கு மனம் இருக்கிறது, பணம் இல்லை என்கிற ரீதியில் அமைச்சர்கள் பதிலளித்தனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இன்றும் உண்ணாவிரதம் நீடித்து வந்த நிலையில் ஜாக்டோ ஜியோ மாநில செய்தி தொடர்பாளர் கே. தியாகராஜனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போராட்டம் நடக்கும் எழிலகத்தை தாண்டித்தான் முதல்வரும், அமைச்சர்களும் செல்கிறார்கள். ஆனால் போராட்டக்காரர்களிடம் சென்று பேச யாரும் முயலவில்லை. இதே நிலை நீடித்தால் போராட்டத்தை வேறு வடிவத்தில் தீவிரப்படுத்துவதை தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்று ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று மாலை திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தங்கள் சோர்வையும் பொருட்படுத்தாமல் திடீரென கோட்டை நோக்கி முற்றுகையிட புறப்பட்டனர். சுமார் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் எழிலகத்திலிருந்து காமராஜர் சாலை வழியாக திரண்டு வந்தனர்.

போலீஸார் அவர்களை தடுக்க முடியாமல் திணறினர். ஊர்வலமாக வந்தவர்கள் சுவாமி சிவானந்தா சாலை வழியாக நேப்பியர் பாலம் வரை வந்துவிட்டனர் அப்போது போலீஸார் இடையில் புகுந்து அவர்களை தடுத்தனர். அப்போது அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் எழிலகத்திலிருந்து தலைமைச்செயலகம் நோக்கி செல்லும் வாகனங்கள் சாலையில் அப்படியே நின்றன. போராட்டம் நடத்தியவர்களை போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றி கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x