Published : 21 Jun 2018 08:09 PM
Last Updated : 21 Jun 2018 08:09 PM

கமல் ட்ரம்ப்பைக் கூட சந்திக்கட்டும்: அமைச்சர் ஜெயக்குமார் பதில்

கமல் யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும். அது அவரின் உரிமை, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கூட சந்திக்கட்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''தமிழகம் தற்போது வளர்ச்சிப்பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. சேலம்- சென்னை எட்டு வழி சாலை திட்டம், மாநில வளர்ச்சிக்கு உதவும். மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்பு வசதி அவசியம்.

எட்டு வழி சாலை திட்டத்துக்கு நிலம் வழங்குபவர்களுக்கு 3 மடங்கு நிவாரணம் தரப்படும். மக்களுக்கு தேவையான திட்டத்தை தான் அரசு செய்கிறது. அரசின் நன்மைக்கு திட்டம் போடப்படுவதில்லை. அதை உணர்ந்து மக்கள் தங்களுக்கு பிரச்சினை இருந்தால் அதை அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஒளிவு மறைவு அரசுக்கு கிடையாது. ஆணையத்தின் விதிகளை பின்பற்றாமல் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கமல் சோனியா, ராகுலை சந்தித்துள்ளார். அவர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும். அது அவரின் உரிமை, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கூட சந்திக்கட்டும். அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை.

மத்திய அரசின் கருணையுடன் தான் தமிழக அரசு இயங்குவதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். கட்சி ரீதியாக எந்தவிதமான உறவும் எங்களுக்கு இல்லை. மாநில வளர்ச்சிக்கான இணக்கம்தான். தனிப்பட்ட நலனுக்கு அல்ல என்பதை தினகரன் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x