Last Updated : 15 Jun, 2018 08:34 AM

 

Published : 15 Jun 2018 08:34 AM
Last Updated : 15 Jun 2018 08:34 AM

முன்முயற்சி பணிகளில் அதிகாரிகள் குழு தீவிரம்: பாண்டியாறு – புன்னம்புழா திட்டம் தொடங்கப்படுமா?கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகிறது தமிழக அரசு

பாண்டியாறு – புன்னம்புழா திட்டத்துக்கு கேரள அரசின் அனுமதி பெறுவதற்கான முன்முயற்சியை 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் தமிழகத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. மத்திய அரசும் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துவிட்டது. ஆனால், ஆணையத்துக்கு உறுப்பினர்களை நியமிக்காமல் கர்நாடக அரசு வழக்கம்போல பிடிவாதம் பிடித்து வருகிறது. இதனால், ஆணையத்தின் மூலம் காவிரி நீர் தமிழகத்துக்கு கிடைப்பது உத்தரவாதம் இல்லாத நிலைதான் நீடிக்கிறது.

ஒருபுறம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி நீரை எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழக அரசு, மறுபுறம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நீரோடைகள், உப நதிகளை திருப்பிவிட்டு பாண்டியாறில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ள மோயாறுக்கு தண்ணீரை கொண்டு போய் சேர்க்கும் பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்துக்கான முன்முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நடுவட்டம் என்ற மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் பாண்டியாறு, கேரளாவில் ஓடும் சாளியாற்றில் போய் கலக்கிறது. சாளியாற்றுடன் ஏராளமான கிளை நதிகள் கலக்கின்றன.

பாண்டியாறில் அணை கட்டுவதற்கு 53 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. ஆனால், தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. பின்னர் 2006-ம் ஆண்டு பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கேரள அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. அதை கேரள அரசு கண்டுகொள்ளவில்லை. அதனால், திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இது குறித்து தமிழக அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியது:

கேரள அரசின் பாராமுகத்தால் பரம்பிக்குளம் - ஆழியாறு, பாண்டியாறு - புன்னம்புழா ஆகிய திட்டங்கள் தாமதமாகின்றன. இந்நிலையில், தமிழகத்தின் தண்ணீர் தேவையை கருத்தில்கொண்டு 12 ஆண்டுகளுக்குப் பிறகு பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை தொடங்குவதற்கான முன்முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

அதன்படி, இத்திட்டம் பற்றி ஆய்வு செய்வதற்காக 2 மாதங்களுக்கு முன்பு காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. கேரளா அரசின் பாராமுகம் குறித்து மத்திய நீர்வள குழுமத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மத்திய நீர்வள குழுமத்தின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த மே மாதம் டெல்லியில் இரு மாநில பொதுப்பணித் துறை அதிகாரிகள் சந்தித்து மேற்கண்ட திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பெரிய முன்னேற்றம் இல்லாவிட்டாலும், திட்டம் தொடர்பான முன்முயற்சி மீண்டும் தொடங்கியிருப்பது நல்ல அம்சம்தான்.

பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்துக்காக 2006-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கருத்துருவில் மாற்றம் செய்யலாமா? காப்புக் காடுகளில் திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? சுற்றுச்சூழல் அனுமதி, எவ்வளவு தொலைவுக்கு கால்வாய் அமைக்க வேண்டும், சுரங்கப் பாதை பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. அண்மையில் ஆனைமலை ஆறு பகுதியை பொதுப்பணித் துறை அதிகாரிகள் குழு பார்வையிட்டு, அப்பகுதியின் தற்போதைய நிலை, நீர்வரத்து, அணை கட்டுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்தது.

இத்திட்டத்துக்கு கேரள அரசின் ஒப்புதல் பெறுவதுதான் முக்கியப் பணியாகும். ஏனென்றால் மேட்டூர் அணை கட்டுவது குறித்த யோசனை 1896-ம் ஆண்டு உருவானது. 1906-ம் ஆண்டு அறிக்கை தயாரானது. 1924-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டு, 1934-ம் ஆண்டு மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டது. அதுபோல, மாநிலங்களுக்கிடையேயான திட்டமாக பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் இருப்பதால் கேரள அரசு அனுமதியைப் பெறுவதில்தான் முதல்கட்ட வெற்றி இருக்கிறது. அதன்பிறகு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது, திட்டத்துக்கான நிதியைப் பெறுவது, நவீன தொழில்நுட்பத்தில் பணிகளை விரைந்து முடிப்பது போன்றவற்றில் எந்த சிரமமும் இருக்காது.

பாண்டியாறில் சிறியதும் பெரியதுமாக அணைகள் கட்டி, சுமார் 21 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை (டனல்) அமைத்து, அதன்மூலம் கொண்டு வரப்படும் தண்ணீர் கிளை நதி வழியாக மோயாறுக்கு கொண்டு வந்து சேர்க்கப்படும். சரியாக திட்டமிட்டு பணிகளைத் தொடங்கினால் நவீன தொழில்நுட்பத்தில் அதிகபட்சம் 4 ஆண்டுகளில் மொத்த திட்டப் பணிகளையும் முடிக்க முடியும். இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 7 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். இந்த தண்ணீர் மோயாறில் இருந்து பவானிசாகர் அணைக்கு போய்ச் சேரும். பவானிசாகர் அணை பாசனத்துக்கு போக மீதம் தண்ணீர் இருந்தால், அதை பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றில் கலக்கச் செய்து காவிரி டெல்டா பாசனத்துக்கும் பயன்படுத்தலாம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x