Published : 08 Jun 2018 08:06 AM
Last Updated : 08 Jun 2018 08:06 AM

சேலத்தில் மரம் வெட்டிய நிறுவனத்திடம் ரூ.7 லட்சம் பெற்றதாக பியூஸ் மனுஷ் மீது புகார்

சேலத்தில் சாலையோரத்தில் இருந்த மரத்தை வெட்டிய தனியார் நிறுவனத்திடம் இருந்து ரூ.7 லட்சம் காசோலை பெற்றதாக, ‘சேலமே குரல் கொடு’ நிர்வாகி பியூஸ் மனுஷ் மீது தேசிய மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மணிகண்டன், மாநகர காவல் ஆணையர் சங்கர், ஆட்சியர் ரோஹிணியிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த சில தினங்களுக்கு முன் சேலம் நான்கு ரோடு அருகே இயங்கி வரும் ஜவுளி நிறுவனத்தின் முன்பு இருந்த மரம் வெட்டப்பட்டது. மரம் வெட்டியதைக் கண்டித்து கடை முன்பு பியூஸ் மனுஷ் போராட்டத்தில் ஈடுபட்டதோடு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் புகார் செய்தார்.

இந்நிலையில், மரத்தை வெட்டியதை ஈடு செய்ய சம்பந்தப்பட்ட ஜவுளி நிறுவனத்தின் சார்பில் ஜங்ஷன் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இமயவரம்பன் ஆகியோர் மூலம் ரூ.7 லட்சத்துக்கான காசோலையை பியூஸ் மனுஷ் பெற்றுள்ளார். மேலும், காசோலை வாங்கிய புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பியூஸ் மனுஷ் வெளியிட்டுள்ளார்.

இவரது பராமரிப்பின் கீழ் உள்ள நீர்நிலைகளை பராமரிக்கவும், மரக்கன்றுகளை நடுவதாகவும் கூறி தன்னிச்சையாக காசோலையை பெற்றுள்ளார். எனவே, அரசுக்கு சொந்தமான நீர்நிலைகளை மாவட்ட நிர்வாகம் அவர் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும். தனியார் நிறுவனத்திடம் காசோலை பெற்றது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

புகாருக்கு விளக்கம்

இதுகுறித்து பியூஸ் மனுஷ் கூறியதாவது: தனியார் நிறுவனம் முன்பு இருந்த மரம் வெட்டப்பட்டது தொடர்பான புகார் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் வாபஸ் பெறப்படவில்லை. சாலையோரம் இருந்த ஒரு மரத்தை வெட்டியதற்கு பதிலாக அம்மாபேட்டை ஏரியில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு தரும்படி தனியார் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தேன். அவர்கள் அம்மாபேட்டை ஏரியை பார்த்துவிட்டு, சகதியாக இருப்பதால் தங்களால் மரக்கன்றுகளை வைக்க முடியாது என்று அந்த நிறுவனத்தினர் ரூ.7 லட்சத்துக்கான காசோலை அளித்தனர். மரக்கன்று நடுவதற்காகவே காசோலையை பெற்றேன். இந்த காசோலையை ‘கேன்சல்’ செய்துவிட்டேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x