Published : 24 Jun 2018 08:48 AM
Last Updated : 24 Jun 2018 08:48 AM

தூய்மை நகரங்கள் பட்டியலில் தேசிய அளவில் சென்னை மாநகராட்சி 100-வது இடத்துக்கு முன்னேற்றம்: முதல் 100 நகரங்களில் திருச்சி, கோவை, ஈரோடு

மத்திய அரசு வெளியிட்டுள்ள தூய்மை நகரங்கள் பட்டியலில் தேசிய அளவில் சென்னை மாநகராட்சி 100-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம், நாட்டில் உள்ள 4 ஆயிரம் நகரங்கள் தூய்மையான நகரங்களாக மாற்றப்பட வேண்டும் என்ற இலக்குடன், மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் சார்பில், கடந்த 2014-ம் ஆண்டு தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப் பட்டது.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகரங்களை தூய்மை நகரங்களாக மாற்ற மாநில அரசுகளுக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த நிதி, முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய கடந்த 2 ஆண்டுகளாக தூய்மை நகரங்களை மதிப்பிட்டு, சிறப்பாக செயல்பட்டு வரும் நகரங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சிகள் மேற்கொள்ளும் திடக்கழிவு மேலாண்மை, பொதுமக்கள் கருத்து, ஸ்வச்சத்தா செயலி மூலம் பெறப்படும் புகார்கள் மீதான தீர்வு, திறந்தவெளியில் மலம் கழித்தலை தடுப்பது உள்ளிட்ட அம்சங்களில் மதிப்பீடு செய்யப்பட்டு தூய்மை நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மதிப்பீட்டில், மொத்தம் உள்ள 434 நகரங்களில் சென்னை மாநகராட்சிக்கு 235-வது இடம் கிடைத்தது.

இந்நிலையில் மத்திய நகர்ப் புற வளர்ச்சி அமைச்சகம் இந்த ஆண்டுக்கான பட்டியலை நேற்று வெளியிட்டது. அதில் மொத்தம் உள்ள 485 நகரங்களில் சென்னை மாநகராட்சி 100-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. முதல் 3 இடங்களை முறையே, மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், போபால் மற்றும் சண்டிகர் ஆகியவை பிடித்துள்ளன.

மாநில அளவில் 4-ம் இடம்

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் தமிழக அளவில் 1 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள 28 நகரங்களில் சென்னை மாநகராட்சி 24-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு வெளியிடப்பட்ட தூய்மை நகரங்கள் பட்டியலில் 4-ம் இடத்துக்கு சென்னை முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. முதல் 3 இடங்களை திருச்சி, கோவை, ஈரோடு ஆகிய நகரங்கள் பிடித்துள்ளன.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர்தா.கார்த்திகேயன் கூறியதாவது:

திறந்தவெளியில் மலம் கழித் தல் இல்லாத நகரமாக சென்னை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக அதிக அளவில் சமுதாய கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. வீட்டுக் கழிவுகளை உரமாக மாற்றும் கிடங்குகள் அதிக அளவில் அமைக்கப் பட்டுள்ளன.

மேலும், சுற்றுப்புற தூய்மைக் காக மத்திய அரசு சார்பில் பிரத்யேகமாக வழங்கப்பட்ட கைபேசி செயலியான ‘ஸ்வச்சத்தா’ மூலம் கிடைக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் சென்னை 100-வது இடத்துக்கு முன்னேற முடிந்தது.

இது போதாது. மேலும் முன்னேற வேண்டியுள்ளது. அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். பொதுமக்கள் ஆங்காங்கே குப்பைகளை வீசி எறிவதை நிறுத்தி, வீடு வீடாக வரும் மாநகராட்சி வாகனங்களில் மட்டுமே குப்பைகளை கொடுத்தால் மட்டுமே முன்னேற்றம் சாத்தியமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கன்டோன்மென்ட் விருது

நாட்டில் உள்ள கன்டோன்மென்ட் வாரியங்கள் அளவி லான போட்டியில், தூய்மை யான கன்டோன்மென்ட் விருதை டெல்லி கன்டோன்மென்ட் பெற்றுள்ளது. தூய்மைக்காக புதுமை, சிறந்த செயல்பாட்டுக்கான விருதுக்கு சென்னை புனித தோமையர் மலை கன்டோன்மென்ட் தேர்வு செய்யப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x