Published : 08 Jun 2018 09:32 AM
Last Updated : 08 Jun 2018 09:32 AM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.3 கோடியில் பெண்கள் விடுதி கட்டும் பணி தாமதம்: சமூகநலத் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்

காஞ்சி மாவட்டத்தில் வேலைக் குப் போகும் பெண்களுக்கு ரூ. 3 கோடியில் தங்கும் விடுதி கட்ட நிதி ஒதுக்கீடு செய்தும், அதற் கான இடம் தேர்வு செய்வதில் சமூக நலத் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

காஞ்சி மாவட்டத்தில் ஸ்ரீபெ ரும்புதூர், தாம்பரம் மெப்ஸ், மறைமலை நகர், சோழிங்கநல்லூர் போன்ற பகுதியில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இத்தொழில் நிறுவனங்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக் கான பெண் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். இவர்கள் தங்குவதற்கு வசதியான, பாதுகாப்பான தங்கு விடுதிகள் இல்லாமல் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். இந்நிலையில், காஞ்சி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர் பகுதிகளில் வேலைக்கு போகும் பெண்களுக்கான தங்கும் விடுதிகள் கட்டப்படும் என கடந்த 2014-ம் ஆண்டு தமிழக அரசு 110 விதியின் கீழ் அறிவிப்பு செய்தது. இதைத் தொடர்ந்து 3 தங்கும் விடுதிகளைக் கட்டுவதற்கு மொத்தம் ரூ.3 கோடியே 3 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 4 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் பெண் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதிகள் கட்டுவதற்கான இடத்தை சமூகநலத்துறை அதிகாரிகள் தேர்வு செய்யாமல் மெத்தனமாக இருந்து வருவதாக பொதுமக்கள் புகார் எழுப்புகின்றனர். இதைத் தொடர்ந்து வேலைக்குப் போகும் பெண்களுக்கான தங்கும் விடுதிகள் கட்டும் பணி, கடந்த 4 ஆண்டுகளாக வெறும் அறிவிப்பாகவே இருந்து வருகிறது.

இதுகுறித்து பொதுப்பணித் துறையைச் சேர்ந்த கட்டுமானப் பொறியாளர் ஒருவர் கூறியதாவது: காஞ்சி மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் பெண் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதிகள் கட்டப்படும் என 110 விதியின் கீழ் கடந்த 2014-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.3 கோடியே 3 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து பொதுப்பணித் துறை சார்பாக, தங்கும் விடுதிகளுக்கான கட்டிடங்கள் கட்ட இடம் தேர்வு செய்து கொடுக்கும் படி சமூகநலத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக சமூகநலத் துறை அதிகாரிகள் இடம் தேர்வு செய்து கொடுக்காததால், அப்பணியை நிறுத்தி வைத்துள்ளோம் என்றார்.

சமூக நலத்துறை அலுவலர் ஒருவர் கூறும்போது: பெண்கள் விடுதி கட்ட இடம் கேட்டு வருவாய்த் துறையினருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். ஆனால் இடம் தேர்வு செய்வதில் வருவாய்த் துறை அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். மாவட்டத்தில் அரசு நிலங்கள் தாராளமாக இருந்தும் நிலத்தை ஒதுக்கீடு செய்வதில் அதிகாரிகள் காலம் கடத்துகின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x