Published : 21 Jun 2018 08:40 AM
Last Updated : 21 Jun 2018 08:40 AM

உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாமல் இருக்க கர்நாடகம் சூழ்ச்சி; காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் கே.பழனிசாமி கடிதம்

காவிரி மேலாண்மை ஆணையத் தின் செயல்பாட்டை தள்ளிவைக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கை, உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் இருப்பதற்கான மற்றுமொரு சூழ்ச்சியாகும். எனவே, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர் பான வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. அதைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விளக்கம் கோரும் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் தற்போது காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையத் தின் தலைவராக மத்திய நீர் ஆணைய தலைவராக உள்ள மசூத் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் காவிரி நீரால் பயன்பெறும் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து பகுதிநேர பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும். தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆணைய உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் கர்நாடக அரசு இன்னும் தங்களது மாநிலத்துக் கான பிரதிநிதியை அறிவிக்கவில்லை.

பருவ மழை தொடக்கம்

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. கர்நாடக மாநில அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், அணைகள் நிரம்பி வருகின்றன. இதையடுத்து, சமீபத்தில் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்குதண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின், மழை குறைந்ததால் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்துக்கு இந்த ஆண்டு வழங்கப்பட வேண்டிய நீர் இதுவரை கர்நாடகா விடுவிக்கவில்லை.

கடந்த 17-ம் தேதி டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் கே.பழனிசாமி பங்கேற்றார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதல்வர், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டும் எனக்கோரி மனு அளித்தார்.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்து பேசினார். கர்நாடகாவின் கோரிக்கையை வலியுறுத் தும் மனுவை பிரதமர் மோடிக்கும் நிதின் கட்கரிக்கும் வழங்கினார். மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்த விவகாரத்தில் கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள பல விதிமுறைகள் தங்களது மாநிலத்துக்கு எதிராக இருக்கிறது என்று அவர் கூறியதாகவும் தெரிகிறது.

உடனே கூட்ட வேண்டும்

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி நேற்று கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியிருப் பதாவது:

காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு வின் செயல்பாடுகளை தள்ளிவைக்க வேண்டும் என்று மத்திய அரசை கர்நாடக முதல்வர் கேட்டுக் கொண்டதாகவும் செயல்திட்டத்தை, நாடாளுமன்ற இரு அவைகளிலும் வைத்து விவாதிப்பது நல்லது என்று அவர் தெரிவித்துள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளுக்கு உரிய முக்கியத்துவத்தை கர்நாடக அரசு கொடுப்பதில்லை என்பதும், உச்ச நீதிமன்றத்தால் ஏற்கெனவே கடந்த பிப்ரவரி 16-ல் தீர்வு காணப்பட்ட ஒரு விஷயத்தை மீண் டும் கிளற முயற்சிப்பதும் தெளிவாக தெரிகிறது.

கர்நாடக மாநிலம் முன்வைத்த பிரச்சினைகளும் கருத்துகளும் உச்ச நீதிமன்றத்தால் கடந்த பிப்ரவரி 16 மற்றும் மே 18-ம் தேதிகளில் அளிக்கப்பட்ட தீர்ப்புகளால் ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்டுள்ளன.

கர்நாடகாவின் சூழ்ச்சி

உச்ச நீதிமன்றம் கடந்த மே 18-ம் தேதி பிறப்பித்த தீர்ப்பில், காவிரி மேலாண்மை ஆணை யம் தொடர்பாக மத்திய அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிட வேண்டும். பருவமழை தொடங்கும் முன்பாக அந்த ஆணையம் செயல்பாட்டுக்கு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயல்பாட்டை தள்ளிவைக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கை உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் இருப்பதற்கான மற்றுமொரு சூழ்ச்சியாகும்.

இதன்மூலம் ஏற்கெனவே சட்டப்பூர்வமாக தீர்க்கப்பட்ட பிரச்சினையை மீண்டும் எழுப்ப முயல்வதாக தெரிகிறது. இதை அனுமதிக்க முடியாது.

கடந்த 6 ஆண்டுகளாக தமிழகத்துக்கு தரவேண்டிய காவிரி நீரை உரிய காலத்தில் கர்நாடகம் திறந்துவிட தவறியதால், தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி, கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் எப்போது வரும் என்று தமிழக விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயல்பாட்டை தாமதப்படுத்துவது, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும். இது, தமிழக விவசாயிகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, தமிழகத்துக்கு மாதந்தோறும் 10 நாட்கள் அடிப்படையில் கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக கூட்டுமாறு மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு தாங்கள் உத்தரவிட வேண் டும்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x