Published : 14 Jun 2018 10:18 AM
Last Updated : 14 Jun 2018 10:18 AM

தமிழகத்தில் இன்று இருந்திருந்தால் பெரியார் எத்தனை முறை சுடப்பட்டிருப்பார்?- ‘தமிழாற்றுப்படை’ விழாவில் கவிஞர் வைரமுத்து கேள்வி

கவிஞர் வைரமுத்து ‘தமிழாற்றுப்படை’ எனும் தலைப்பில் 17-வது ஆளுமையாக எழுத்தாளர் ஜெயகாந்தனை பற்றிய கட்டுரையை நேற்று அரங்கேற்றினார்.

சென்னை நாரத கான சபாவில் எழுத்தாளர் சிவசங்கரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கட்டுரை வாசிப் பதற்கு முன்னதாக கவிஞர் வைரமுத்து பேசியதாவது:

மத்திய தர வர்க்கத்தின் மொழி அலங்காரமாக இருந்த சிறுகதையை அடித்தட்டு மக்களுடைய வியர்வை, ரத்தம், கண்ணீர் பிசுக்கோடு எழுதியவர் ஜெயகாந்தன். ஓர் எழுத்தாளனுக்குரிய கட்டற்ற சுதந்திரத்தை அவர் பெற்றிருந்தார். கருத்து வெளிப்பாட்டுக்கான உரிமைகளைக் காலம் அவருக்குத் தந்திருந்தது.

இந்தியச் சமூகத்தில் இப்போது அந்தச் சுதந்திரம் இருக்கிறதா என்பதை சர்வதேச சமூகம் கவனித்துக் கொண்டி ருக்கிறது.

கருத்துரிமைப் போராளிகளான பன்சாரே, தபோல்கர், கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்றோர் கொல்லப்பட்டிருப்பதும், மலையாள எழுத்தாளர் பஷீர், தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் போன்றோர் ஒடுக்கப்பட்டிருப்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல.

கோள்களின் குடும்பத்தில் சூரியன் மையத்தில் இருக்கிறது. கோள்கள் அதைச் சுற்றி வருகின்றன என்ற உண்மையைக் கண்டறிந்தவர் கலீலியோ. ஆனால் அந்த உண்மையைச் சொல்லும் கருத்துரிமை மறுக்கப்பட்ட கலீலியோ, இறக்கும்வரை வீட்டுச் சிறையில் இருக்குமாறு தண்டிக்கப்பட்டார். ஆனால் மறுக்கப்பட்ட அந்தக் கருத்து வெளிப்பட்ட பிறகுதான் மனிதகுலம் வானத்தை நோக்கிப் பாய ஆரம்பித்தது.

இன்று சகிப்புத்தன்மை குறைந்திருப்பதை நினைத்தால் நெஞ்சில் ரத்தம் கட்டுகிறது. பெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்? ராஜாராம் மோகன்ராய் இன்றிருந்தால் தூக்குக் கயிறு அவர் கழுத்தை எத்தனை முறை இறுக்கி இருக்கும்? ராமானுஜர் இன்றிருந்தால் எத்தனை அமைப்புகள் அவரை ஏற்றுக்கொண்டிருக்கும்?

ஜெயகாந்தன் இன்றிருந்தால் எத்தனை முறை குண்டர் சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்?

பன்முகத்தன்மைதான் இந்தியாவின் வலிமை; கருத்துச் சுதந்திரம்தான் அதன் பெருமை. அரசியலைப் படைப்புகள் தடுக்கலாம்; ஆனால் படைப்புகளை அரசியல் தடுக்கக்கூடாது என்றார்.

இவ்விழாவில் நீதியரசர் நாகமுத்து, ராஜாத்தி அம்மாள், விஜயகுமாரி, தேவசேனா ஸ்ரீதர், குமரி அனந்தன், நக்கீரன்கோபால், முன்னாள் துணைவேந்தர்கள் ம.ராசேந்திரன், திருவாசகம், இயக்குநர்கள் எஸ்பி.முத்துராமன், வசந்த் சாய், ஜேடி ஜெர்ரி, கவிஞர் முத்துலிங்கம், லேனா தமிழ்வாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x