Published : 12 Jun 2018 04:54 PM
Last Updated : 12 Jun 2018 04:54 PM

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்தது தொடர்பான புகாரில் அவரது முழு பதவிக் காலத்தையும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் கடந்த 2011-ம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார், நீண்டகாலமாக நடந்த வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரித்து வருவதாக அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

ஆனால் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ராஜேந்திர பாலாஜி மீதான புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனத் தெரிவித்து அவர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை. விசாரணையைத் தொடர வேண்டியதில்லை என அறிக்கை அளித்துள்ளதால், அந்த அறிக்கையை ஏற்று ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான புகார் மீதான மேல் நடவடிக்கையை கைவிட பொதுத்துறை செயலர் கடந்த 2014- பிப்ரவரி 4 அன்று உத்தரவிட்டார் எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வு புதிய உத்தரவைப் பிறப்பித்தது. அது பற்றிய விபரம் வருமாறு:

''ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்த மே.23- 2011-ம் ஆண்டிலிருந்து ஏப்ரல் 20, 2013 காலகட்டத்தை மட்டுமே கணக்கில் கொண்டு விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை, ஆரம்பகட்ட விசாரணை செய்து, அதன் மீது நடவடிக்கை தேவையில்லை எனப் புகாரை முடித்துள்ளது.

ஆனால் 1996-ம் ஆண்டு திருத்தங்கல் பேரூராட்சியின் துணைத்தலைவராக பதவி வகித்துள்ளார். அந்தப் பதவியையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனடிப்படையில், 1996-ம் ஆண்டு முதல் 2018 பிப்ரவரி வரையிலான காலத்தில் அவரது வருமானத்தை கணக்கில் கொண்டு, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டியது அவசியம்.

எனவே அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான தல்லாக்குளம் மகேந்திரன் புகாரை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை முழுமையாக விசாரிக்க வேண்டும் என உத்தரவிடுகிறோம். திருத்தங்கல் ஊராட்சி துணைத் தலைவராக இருந்த 1996-ம் ஆண்டு காலகட்டத்திலிருந்து ராஜேந்திரபாலாஜி மீதான புகாரை விசாரிக்க வேண்டும்.

எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். விசாரணை தொடரான அறிக்கையை குறிப்பிட்ட கால இடைவெளியில் சீலிட்ட கவரில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்ய வேண்டும்.

விசாரணை குறித்த முதல் அறிக்கையை ஆகஸ்ட் 3-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு வழக்கை வரும் ஆகஸ்ட் 6-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

முன்னதாக, மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார், அதில், “தமிழக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ராஜபாளையம் அருகே தேவதானத்தில் ரூ.74 லட்சம் மதிப்பிற்கு 35 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். இந்த நிலத்தின் அசல் மதிப்பு ரூ.6 கோடி தவிர, திருத்தங்கல் பகுதியில் ரூ. 23.33 லட்சத்துக்கு 2 வீட்டுமனைகளும், ரூ.4.23 லட்சத்திற்கு 75 சென்ட் நிலமும் வாங்கியுள்ளார். இந்த சொத்தின் சந்தை மதிப்பு ரூ. 1 கோடிக்கு அதிகமாகும்.

இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தேன். புகாரின் பேரில் அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனு கடந்த 2014-ம் ஆண்டு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரித்து வருவதாக அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் தாக்கல் செய்த பதில் மனுவில், அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கடந்த 2011-ம் ஆண்டு மே 23 முதல் 2013-ம் ஆண்டு ஏப்ரல் 20 வரையிலான காலத்தில் அமைச்சர் பதவியை தவறாகப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான புகார்களில் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை அதிகாரி, ராஜேந்திர பாலாஜி மீதான புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இதனால் அவர் மீது லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை. விசாரணையைத் தொடர வேண்டியதில்லை என அறிக்கை அளித்தார். அந்த அறிக்கையை ஏற்று ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான புகார் மீதான மேல் நடவடிக்கையை கைவிட பொதுத்துறைச் செயலர் கடந்த 2014- பிப்ரவரி 4 அன்று உத்தரவிட்டார் எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, விசாரணை ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு இயக்குனர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு ஒத்திவைத்தது.

இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வகித்த முழுப்பதவி காலத்தையும் விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x