Published : 26 Jun 2018 03:32 PM
Last Updated : 26 Jun 2018 03:32 PM

மயிலாப்பூர், ராயப்பேட்டையில் சுற்றி, சுற்றி ஓய்வில்லாமல் வழிப்பறி செய்த இளைஞர்கள்: ஒரு மணி நேரத்தில் நான்கு பேரிடம் செல்போன் பறிப்பு

சென்னையில் வழிப்பறியில் செல்போனை பறிகொடுப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு மணி நேரத்தில் மயிலாப்பூர், ராயபேட்டை, அபிராமபுரத்தில் 4 பேரிடம் சுற்றி சுற்றி செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.

வெளியே செல்லும்போது செல்போனுடன் மீண்டும் வீடு திரும்புவோமா? என்பது சென்னைவாசிகளிடம் கேள்விக்குறியாகி வருகிறது. எதாவது பிரச்சினை என்றால் செல்போனில் வீட்டுக்கோ, போலீஸுக்கோ தகவல் கொடுக்கலாம். செல்போனே பிரச்சினை என்றால் என்னதான் செய்வது? செல்போனை பாதுகாக்க செல்போன் இல்லாமல் சென்றால் ஏன் வெறும் கையை வீசிக்கொண்டு வந்தாய் என்று கையிலேயே வெட்டுகிறார்கள்.

நாங்கள் என்னதான் செய்வது என்பது சென்னைவாசிகளின் கேள்வியாக உள்ளது. சென்னையில் வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் சோதனையை அதிகப்படுத்தியும் வழிப்பறியில் ஈடுபடுபவர்கள் அடங்கவில்லை. நேற்று மயிலாப்பூர் துணை ஆணையர் எல்லைக்குட்பட்ட பகுதியில் நான்கு இடங்களில் ஒரு மணி நேரத்தில் நான்குபேரிடம் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது.

இதில் மூன்றுபேர் இளைஞர்கள்.

சம்பவம் 1

சென்னை எம்ஜிஆர் நகர் அன்னை சத்தியா நகரில் வசிக்கும் நாகார்ஜுன்(23). இவர் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றுகிறார். நேற்று மாலை சி.பி.ராமசாமி சாலை அருகே செல்லும்போது போன் வந்தது என்று செல்போனை எடுத்து பேசியபடி சென்றுள்ளார். அப்போது ஹோண்டா ஆக்டிவாவில் வந்த இரண்டுபேரில் பின்னால் அமர்ந்திருந்த நபர் இவரது செல்போனை பறித்துச் சென்றார். இவர் புகார் அளித்தது இரவு 7-30 மணி அளவில்.

சம்பவம் 2

நாகார்ஜுன் புகார் அளித்த 20 நிமிடத்தில் 7-50-க்கு அதே ஆக்டிவா நபர்கள் மயிலாப்பூர் கணேசபுரத்தில் வசிக்கும் சாரதி(25) என்ற இளைஞர் மயிலாப்பூர் முண்டகக்கன்னி அம்மன் கோவில் ரயில் நிலையம் அருகே நடந்துச்சென்றபோது அவரது விலை உயர்ந்த செல்போனை பறித்துச்சென்றனர்.

சம்பவம் 3

சாரதியிடம் செல்போனை பறித்த ஆக்டிவா நபர்கள் டீ அருந்தி சற்று ஓய்வெடுத்துவிட்டு 20 நிமிடத்தில் 8-10-க்கு அதே முண்டகக்கன்னி அம்மன் கோவில் பக்கத்திலேயே உள்ள சமஸ்கிருத கல்லூரி அருகே வாக்கிங் சென்ற மயிலாப்பூர் பல்லகுமா நகரைச்சேர்ந்த ஆறுமுகம்(50) என்பவரிடமிருந்து விலை உயர்ந்த செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் 4

பின்னர் இரவு உணவை முடித்த வழிப்பறி நபர்கள், நன்றாக ஓய்வெடுத்து விட்டு 8-55 மணி அளவில் ராயபேட்டை நெடுஞ்சாலை பிணவறை அருகே வந்துள்ளனர். அங்கு சாப்பிடுவதற்கு வெளியே வந்த ஜாம்பசாரில் தங்கி வேலைப்பார்க்கும் ஆந்திராவை சேர்ந்த சேகர்(26) என்பவரிடம் விலை உயர்ந்த செல்போனை பறித்துச்சென்றனர்.

ஒரே நபர்கள், ஒரே வாகனத்தில் மூன்று மணி நேரமாக சுற்றி சுற்றி மூன்று இடங்களில் 4 பேரிடம் செல்போனை பறித்துச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x