Published : 19 Jun 2018 06:29 PM
Last Updated : 19 Jun 2018 06:29 PM

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பவர்களை கைது செய்வதா? டிடிவி தினகரன் கண்டனம்

சேலம் சென்னை புறவழிச்சாலையை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களை கைது செய்யும் போக்கை கண்டித்துள்ள டிடிவி தினகரன், அரசு மக்களை போராடும் நிலையிலேயே தொடர்ந்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“சேலம்-சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்தை அரசு முழு வீச்சில் நடத்திக் கொண்டு வருகிறது. 8 வழிச்சாலையை அமைத்திட நாம் இழக்கப்போவது 7000 ஏக்கர் விவசாய நிலங்கள், 500 ஏக்கர் வனப்பகுதி, 7 ஆறுகளின் வழித்தடங்கள் இவை மட்டுமின்றி 8 மலைகள்.

சேலம்-சென்னை 8 வழி பசுமைச் சாலை அமைவதால் அழியும் பல்லாயிரக்கணக்கான விளை நிலங்களைக் காக்க போராடும் விவசாயிகளை நசுக்கி, அவர்களின் நியாயத்தை புறந்தள்ளிவிட்டு, இந்த அரசு அமைக்கப்போகும் விவசாயிகளின் வேதனை வழிச் சாலையை அமைக்கும் முயற்சியை பழனிசாமியின் அரசு தொடங்கியுள்ளது.

ஒரு திட்டத்தை மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை ஆராய்ந்து, மக்களின் உணர்வுகளை கருணையோடு பார்க்காமல், காவல் துறையைக் கொண்டு பார்க்கும் மனோபாவத்தை இந்த அரசு மாற்றிக் கொள்ளவேண்டும்.

இத்திட்டத்தை எதிர்த்து பேசுபவர்களையும், சமூக ஆர்வலர்களையும், போராடும் விவசாயிகளையும் கைது செய்யும் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். கைது செய்யப்பட்டவர்களை இந்த அரசு உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் இத்திட்டத்திற்கான மாற்று வழியை இந்த அரசு சிந்திக்கவேண்டுமென தெரிவித்துக்கொள்கிறேன். விளை நிலங்களையும் இயற்கை வளங்களையும் நீர்வழித்தடங்களையும் பாதுகாத்திடவேண்டும் என்பது விழிப்புணர்வாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில் கண்களை விற்று ஓவியம் வாங்குவதைப் போலத்தான் இந்த 8 வழி பசுமைச் சாலை திட்டம் அமையும்.

ஒவ்வொரு அரசுக்கும், ஒவ்வொரு கொள்கை இருக்கும். பழனிசாமியின் அரசுக்கோ மக்கள் விரோத போக்கு மட்டுமே கொள்கையாக கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமெனில் மக்களை, போராட்ட நிலையிலேயே இந்த அரசு வைத்துள்ளது. இது தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடந்து கொண்டிருக்கிறது.

ஓஎன்ஜிசி, கெய்ல், மீத்தேன் திட்டம், காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயத்தையும், நியூட்ரினோ திட்டம் மூலம் தேனி மாவட்ட விவசாயத்தையும், 8 வழிச்சாலை திட்டம் மூலம் சேலம், தருமபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களின் விவசாயத்தையும் அழிக்கின்ற மத்திய அரசின் மற்றொரு திட்டத்தை பழனிசாமியின் அரசு முன்னெடுத்து வருகிறது.

இந்த திட்டம் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு பிரயோஜனப்படும் என்று பரவலாக மக்கள் கருதுகின்றனர். விவசாயத்தை தாரை வார்த்துக் கொண்டிருந்தால் பின்பு உணவுக்கு என்ன செய்வோம் என்பதை இந்த ஆட்சியாளர்கள் சிந்திக்கவேண்டும். விவசாயத்திற்கு உதவும் அல்லது விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வளர்ச்சி மட்டுமே தமிழகத்திற்கு தேவை என்பதை பழனிசாமியின் அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.

இதனை உணராமல் ஆணவத்தோடு இந்த அரசு செயல்படுமேயானால் தமிழகத்தின் விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பதை ஒரு மக்கள் இயக்கமாக அமமுக முன்னெடுக்கும் என்று நான் எச்சரிக்கிறேன். இயற்கை வளங்களை சேதப்படுத்தாமல் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு மாற்று வழி முறையை சிந்திக்கவேண்டும் எனவும் தெரிவித்துக்கொள்கிறேன்.”

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x