Published : 15 Jun 2018 12:38 PM
Last Updated : 15 Jun 2018 12:38 PM

குழந்தை கடத்தல் சந்தேகத்தில் வட மாநில இளைஞர் மீது தாக்குதல்: சேலத்தில் தொடரும் அவலம்

சேலம் அருகே குழந்தையை கடத்த வந்ததாக சந்தேகித்து மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநில இளைஞரை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரை அருகே தட்டாஞ்சாவடி எனும் பகுதியில் வியாழக்கிழமை மாலை வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார். அங்கிருந்த பொதுமக்கள் அந்நபரிடம் விசாரித்தனர். அப்போது அவர் இந்தி மொழியில் பேசியுள்ளார். இதையடுத்து, அந்நபர் குழந்தை கடத்த வந்திருக்கலாம் என சந்தேகித்த பொதுமக்கள் அவரை மின்கம்பத்தில் கட்டிவைத்து கடுமையாக தாக்கினர்.

இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் அந்நபரிடம் விசாரிப்பதற்காக சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு விசாரித்ததில் அந்த இளைஞர் பெயர் ‘பாபு’ என்பது தெரியவந்தது. ஆனால், பெயர் தவிர்த்து வேறு எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை. மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸார் அவரை சென்னைக்கு ரயில் டிக்கெட் எடுத்து கொடுத்து அனுப்பி வைத்தனர்.

சேலம் மாவட்டத்தில் குழந்தைக் கடத்தல் வதந்தியால் வடமாநில இளைஞர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், குழந்தை கடத்தல் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும், சமூக வலைத்தளங்களில் அத்தகைய வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சேலம் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x