Published : 18 Jun 2018 04:37 PM
Last Updated : 18 Jun 2018 04:37 PM

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ஸ்டாலின்

 மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லத்துரையை பதவி நீக்கம் செய்து அவரது பதவிக் காலத்தில் நடைபெற்றுள்ள பல்கலைக்கழகத்தின் அனைத்து முறைகேடுகளையும் விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து கடந்த 14-ம் தேதி தீர்ப்பளித்தது. துணைவேந்தர் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றம் சாட்டி தேடுதல் குழு உறுப்பினராக இருந்த ராமசாமி ஏற்கெனவே தனது பதவியை ராஜினாமா செய்தும்கூட, துணைவேந்தர் நியமனத்தின்போது முன்பிருந்த தமிழக ஆளுநர், துணைவேந்தராக செல்லத்துரையை நியமித்தார் என்பதை சுட்டிக்காட்டுவது இந்த நேரத்தில் பொருத்தமாக இருக்கும். துணைவேந்தராக நியமிக்கப்பட்டவர் மீது இருந்த முதல் தகவல் அறிக்கை கூட பிறகு அவசர அவசரமாக விசாரித்து முடிக்கப்பட்டு, அந்த வழக்கிலிருந்து அவரை விடுவித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட விநோதமும் அதிமுக ஆட்சியில் நிகழ்ந்தது.

இந்நிலையில் துணை வேந்தரை நியமிக்கும் தேடுதல் குழு அளுநர் மாளிகை அருகேயுள்ள நட்சத்திர ஹோட்டலில் துணைவேந்தர் தேர்வை நடத்தியது. அந்த கலந்தாலோசனை 25 நிமிடம் மட்டுமே நடைபெற்றது. மூன்றில் இரண்டு தேடுதல் குழு உறுப்பினர்களிடம் கலந்தாலோசிக்கவில்லை. ஒட்டுமொத்தமாக தேடுதல் குழுவில் முறைப்படியான கலந்தாலோசனையின்றி, துணைவேந்தர் நியமிக்கப்பட்டதால் ரத்து செய்கிறோம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் அந்த துணைவேந்தரை நீக்காமல், இப்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு தமிழக அரசு வாய்ப்பளித்துள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது. உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தவுடன் துணைவேந்தரைப் பதவி நீக்கம் செய்யாமல் தற்போதுள்ள ஆளுநரும் மவுனம் காப்பது பல்வேறு ஐயப்பாடுகளுக்கு இடமளிப்பதாகப் பலரும் கருதுகின்றனர்.

துணைவேந்தர் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று கல்வியாளர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், நட்சத்திர ஹோட்டலில் 25 நிமிடம் மட்டும் கலந்தாலோசனை நடத்தி,ஒரு தேடுதல் குழு கொடுத்த பரிந்துரையை முன்பிருந்த தமிழக ஆளுநர் ஏற்றுக்கொண்டு செல்லத்துரையை நியமனமும் செய்தது யாரும் எதிர்பாராதது மட்டுமல்ல, கல்வியாளர்களுக்கும், பல்கலைக்கழக நிர்வாகம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கும் அனைவருக்கும் பெருத்த ஏமாற்றமாகவே அமைந்தது.

ஆகவே தற்போதுள்ள ஆளுநர் உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லத்துரையை உடனே பதவி நீக்கம் செய்து, இனி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நியமிப்பதற்காக அமைக்கப்படும் தேடுதல் குழுவிடம் மீண்டும் செல்லத்துரை விண்ணப்பம் அளித்தால் அதை நிராகரிக்க வேண்டும்.

செல்லத்துரையின் துணைவேந்தர் பதவிக் காலத்தில் நடைபெற்றுள்ள பல்கலைக்கழகத்தின் அனைத்து முறைகேடுகளையும் முறையாக விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு ஒன்றை உயர்கல்வித் துறைச் செயலாளர் உடனே அமைக்க வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x