Published : 18 Jun 2018 08:49 AM
Last Updated : 18 Jun 2018 08:49 AM

கல்வி, ஒழுக்கம் சரியாக இருப்பது அவசியம்: அறக்கட்டளை விழாவில் மாணவர்களுக்கு சிவக்குமார் அறிவுரை

கல்வி, ஒழுக்கம் ஆகிய இரண்டும் சரியாக இருந்தால் மாணவர்கள் உலகின் எந்த மூலைக்கும் போகலாம் என்று நடிகர் சிவக்குமார் கூறினார்.

நடிகர் சிவக்குமார் தனது அறக்கட்டளை மூலம் கடந்த 39 ஆண்டுகளாக, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவர்கள் மற்றும் கலை, விளையாட்டு, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டி வருகிறார்.

இந்நிலையில், சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 39-ம் ஆண்டு நிகழ்வு சென்னையில் நடந்தது. இதில், 21 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2,05,000 மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏழை மாணவர்களுக்காக திண்டிவனம் கல்வி மேம்பாட்டுக் குழு நடத்தும் தாய்த் தமிழ் பள்ளிக்கு ரூ.1 லட்சம், முதல் தலைமுறையாக படிக்கும் ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும், ‘வாழை’ இயக்கத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.

விழாவில் சிவகுமார் கூறியபோது, ‘‘உங்களைவிட அதிக வறுமையைப் பார்த்து வளர்ந்தவன் நான். எஸ்எஸ்எல்சி படிக்கும்போது குரூப் போட்டோ எடுக்க என்னிடம் 5 ரூபாய் இல்லை. வாழ்க்கையில் தேவைகள் குறைவாக இருப்பவன்தான் பெரிய செல்வந்தன். கல்வி, ஒழுக்கம் மட்டுமே உங்களைக் காப்பாற்றும். இந்த இரண்டும் சரியாக இருந்தால், உலகின் எந்த மூலைக்கும் போகலாம்” என்றார்.

சூர்யா பேசியபோது, “2,500 மாணவர்களுக்கு உதவும் அளவுக்கு அகரம் அறக்கட்டளை நன்கு வளர்ந்திருக்கிறது. விளையாட்டு, அறிவியல் பிரிவு மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகப்படுத்தப்படும். ‘நான் படித்தே தீருவேன், வெற்றி பெற்றே தீருவேன்’ என்ற வைராக்கியம் இருந்தால் எதுவுமே தடை கிடையாது. நடிகன் என்பதைவிட, ‘அகரம்’ மூலமாக உதவிகள் செய்வதைத்தான் உயர்வாகப் பார்க்கிறேன். வீட்டில், அப்பா-அம்மாவுக்கு, குழந்தைகளுக்கு தேவையான விஷயங்கள் எல்லாம் செய்துவிட்டேன். இனி, செய்கிற ஒவ்வொரு விஷயமும் அகரம் அறக்கட்டளைக்காக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். நகரங்கள், வெளிநாடுகளில் இருப்பவர்கள் கிராம பள்ளிகளுக்கு உதவிகள் செய்தாலே மாற்றம் ஏற்படும்’’ என்றார்.

முன்னதாக, சிவகுமாரின் மகள் பிருந்தா, இறை வணக்கம் பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வரவேற்றார். அகரம் அறக்கட்டளையின் மாணவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x