Published : 23 May 2018 10:31 AM
Last Updated : 23 May 2018 10:31 AM

திருவள்ளூரில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள்: ஆடிட்டர், மனைவியை கட்டிப்போட்டு 150 பவுன், சொகுசு கார் கொள்ளை

திருவள்ளூரில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள், ஆடிட்டர் மற்றும் அவரது மனைவியை கட்டிப் போட்டு 150 பவுன், வெள்ளிப் பொருட்கள், கார் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

திருவள்ளூர் - ராஜாஜிபுரம், பத்மாவதி நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (69). ஆடிட்டரான இவரது மனைவி ரஜிதா (60). இந்தத் தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். 2-வது மகன் லோகேஷ் பெற்றோருடன் வசிக்கிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் வீட்டின் கீழ் தளத்தில் உள்ள அறையில் ராமச்சந்திரன் தம்பதியினர் உறங்கினர். மேல் தளத்தில் உள்ள அறையில் லோகேஷ் தூங்கினார். நள்ளிரவு ஒரு மணியளவில் முகமூடி அணிந்த 5 பேர் கும்பல், வீட்டின் பின்புறக் கதவை உடைத்து வீட்டின் உள்ளே புகுந்துள்ளனர். சத்தம் கேட்டு எழுந்த ராமச்சந்திரன் தம்பதியினர், கொள்ளையர்களைப் பார்த்து கூச்சலிட்டனர்.

உடனே அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி மிரட்டிய கொள்ளையர்கள், கணவன் - மனைவி இருவரையும் துணியால் கட்டிப் போட்டனர். பிறகு, பீரோவில் இருந்த 150 பவுன் நகை, 10 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க பிரேம் கொண்ட மூக்கு கண்ணாடி, 2 அலைபேசிகள், 4 கைக்கடிகாரங்கள், ஒரு ஐபேட் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

பின்னர், வீட்டில் இருந்து வெளியே வந்த கொள்ளையர்கள், வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ராமச்சந்திரனின் காரில் அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது.

கொள்ளை சம்பவம் நடந்தபோது, மேல்தளத்தில் தூங்கிக்கொண்டிருந்த லோகேஷுக்கு பெற்றோரின் சத்தம் சரியாக கேட்கவில்லை. கொள்ளையர்கள் தப்பியோடிய பிறகு, பெற்றோர் போட்ட சத்தம் காரணமாக எழுந்த அவர், கீழ்தளத்துக்கு வந்து பார்த்தபோதுதான் அவருக்கு, விவரம் தெரியவந்தது. .

இதுகுறித்து, தகவலறிந்த காஞ்சிபுரம் சரக டிஐஜி தேன்மொழி, திருவள்ளூர் எஸ்பி சிபிசக்ரவர்த்தி, திருவள்ளூர் டிஎஸ்பி புகழேந்தி, திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் சர்தார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், மோப்ப நாய் சகிதம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில், ராமச்சந்திரன், சென்னையில் உள்ள தனியார் வங்கியின் லாக்கர் ஒன்றில் 150 பவுன் நகையை வைத்திருந்ததும், வங்கி லாக்கர்கள் மாற்றி அமைக்கப்பட்டதால் அந்த நகைகளை வீட்டில் வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது. திருவள்ளூர் டவுன் போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x