Published : 14 May 2018 01:47 PM
Last Updated : 14 May 2018 01:47 PM

சென்னை ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை: பணிச்சுமை காரணமா?- போலீஸ் விசாரணை

ஆயுதப்படை காவலர் ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் பணிச்சுமை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை அசோக் நகர் காவலர் பயிற்சிப் பள்ளியில் பணியாற்றி வந்தவர் பாலமுருகன்(28). இவர் ஆயுதப்படைப் பிரிவைச் சேர்ந்தவர். சென்னை ஈஞ்சம்பாக்கம், பொதிகை நகரில் தந்தை விஜயரங்கன், தாய் காளியம்மாள் மற்றும் சகோதரிகளுடன் வசித்து வந்தார்.

இவரது தந்தை சைக்கிளில் டீ விற்று பிழைப்பு நடத்துபவர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் பாலமுருகன் காவல்துறையில் பணிக்குச் சேர்ந்தார். கடந்த சில தினங்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லை. இதனால், பாலமுருகன் அடிக்கடி விடுமுறை எடுத்துள்ளார். கடந்த நான்கு நாட்களாக விடுமுறையில் இருந்த அவர் நேற்று பணிக்குத் திரும்பியுள்ளார்.

பிறகு வீடு திரும்பிய பாலமுருகன் வீட்டில் அனைவரும் வெளியே சென்றிருந்த நிலையில் குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குளியலறை நீண்ட நேரமாகத் திறக்கப்படாததால், வீட்டில் உள்ளவர்கள் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாலமுருகன் தூக்கிட்ட நிலையில் கிடந்தார்.

உடனடியாக அவரை மீட்டு பரிசோதித்தபோது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து நீலாங்கரை போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் அங்கு வந்த போலீஸார், பாலமுருகனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பாலமுருகனின் தற்கொலை குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். போலீஸாரின் விசாரணையில், வேலையில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக வேலைக்குப் போகப் பிடிக்கவில்லை என்று பாலமுருகன் பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். பெற்றோர் “உன்னை வருத்திக்கொண்டு மன உளைச்சலோடு வேலை செய்ய வேண்டாம் உன் விருப்பப்படி முடிவெடு’’ என்று கூறியுள்ளனர்.

பாலமுருகனுக்கு திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்துவந்த நிலையில் திடீரென தற்கொலை முடிவுக்கு அவர் வரக் காரணம் என்ன என்பது புதிராக உள்ளது. காவல்துறையில் பணிச்சுமை, மேலதிகாரிகளின் டார்ச்சர், மன அழுத்தம் காரணமாக காவலர்கள் அதை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை முடிவைத் தேடுவது தொடர்கதையாகி வருகிறது.

காவலர் பாலமுருகன் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது இனி நடக்கும் போலீஸ் விசாரணையில் வெளிவரும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x