Published : 23 May 2018 08:01 AM
Last Updated : 23 May 2018 08:01 AM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு அரசின் அலட்சியமே காரணம்: ராகுல் காந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் குற்றச்சாட்டு

தமிழக அரசின் அலட்சியமே தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் என்று ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களில் 9 பேரை போலீஸார் சுட்டுக் கொன்றிருப்பது கடும் கண்டத்துக்குரியது. இது அரசு ஆதரவில் நடைபெறும் தீவிரவாத செயலாகும். அநீதிக்கு எதிராகப் போராடிய மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானோர், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:

நீண்ட நாட்களாக தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருவதை அதிமுக அரசு கண்டு கொள்ளவும் இல்லை, சுமூகத் தீர்வு காணவும் இல்லை. போராட்டத்தை முடக்க நினைத்த அதிமுக அரசின் அலட்சியத்தாலேயே துப்பாக்கி சூடுவரை சென்றுள்ளது. காவல்துறை, எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காதது கடும் கண்டனத்துக்குரியது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்:

தூத்துக்குடியில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது கண்டனத்துக்குரியது. துப்பாக்கிச் சூடு மூலம் போராட்டத்துக்கு தீர்வு காண முடியாது. இது ஜனநாயக விரோதச் செயலாகும். இந்த நிகழ்வுகள் குறித்து பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்வுகள் துரதிருஷ்டவசமானவை. இவற்றுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:

தூத்துக்குடியில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு தமிழக அரசும், காவல்துறையும்தான் பொறுப்பாவார்கள். காவல் துறையின் அராஜகம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையமும், மாநில மனித உரிமை ஆணையமும் இணைந்து தாங்களாகவே விசாரணை நடத்த முன்வர வேண்டும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

பொதுமக்களுக்கு பாதிப்பு என்று தெரிந்தும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தமிழக அரசும், மத்திய அரசும் செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிய ஆளும் அதிமுக அரசு கலைக்கப்பட வேண்டிய அரசு என்று தேமுதிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்:

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதுதான் இப்பிரச்சினைக்கு தீர்வாகும். அதைவிடுத்து காவல்துறையைக் கொண்டு மக்களின் போராட்டத்தை முடக்க முயற்சித்தால் இந்த ஆலையை நிரந்தரமாக மூடும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

மநீம தலைவர் கமல்ஹாசன்:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நீதி கேட்டு மக்கள் அமைதியாகப் போராடிய பொழுதெல்லாம் அரசுகள் அலட்சியப்படுத்தின. அரசின் அலட்சியமே அனைத்து தவறுகளுக்கும் காரணம். முன்பு ஆலையினால், இப்போது அரசின் ஆணையால் மக்கள்தான் எப்பொழுதும் உயிர் இழக்கிறார்கள். அனைவரும் அமைதி காக்க வேண்டும்.

நடிகர் ரஜினிகாந்த்:

மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப் போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது. கண்டிக்கத்தக்கது. தூத்துக்குடியில் நடந்த வன்முறை மற்றும் பொதுஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பாகும்.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு :

தூத்துக்குடியில் போலீஸார் தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தி பல உயிர்களை பலிகொண்ட சம்பவத்துக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். மற்ற மாநிலங்களில் விரட்டியடிக்கப்பட்ட திட்டத்தை கொண்டு வந்த மக்கள் விரோத அரசுகளை இந்திய கம்யுனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:

தூத்துக்குடியில் போராடிய மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. துப்பாக்கிச்சூடு மற்றும் அடக்கு முறைகளை ஏவிவிடுவதை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். எனவே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:

தூத்துக்குடியில் ஏற்படும் சகல விளைவுகளுக்கும் மாநில அரசே முழுமுதற் காரணமாகும். பொதுமக்களுக்கு பெருந்தீங்கு விளைவித்து வரும் ஆலையை இயங்க அனுமதி அளித்து, பாதுகாப்பும் தந்து கொண்டிருக்கிற மத்திய, மாநில அரசுகளை கண்டிக்கிறோம். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தியது கண்டிக்கத்தக்கது. மக்கள் நலனுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விசிக தலைவர் திருமா வளவன்:

ஸ்டெர்லைட் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். போலீஸார் மீது கொலை வழக்கு பதிய வேண்டும். இந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே. வாசன்:

தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் ஸ்டெர்லைட் ஆலை சம்பந்தமாக பொதுமக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்.

சமக தலைவர் சரத்குமார், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன், கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x