Published : 05 May 2018 09:21 AM
Last Updated : 05 May 2018 09:21 AM

திரைப்படத் துறையை சார்ந்த 1,605 பேருக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

திரைப்படத் துறையைச் சார்ந்த 1,605 பயனாளிகளுக்கு ரூ.48 லட்சத்து 78 ஆயிரத்து 750 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

திரைப்படத் துறையினர் நலவாரியத்தின் 5-வது குழு கூட்டம், செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, திரைத்துறையினரின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார். அதைத் தொடர்ந்து, இந்த அரசும் திரைப்படத்துறையினர் நலவாரியம் மூலம், பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திரைப்படத் துறை, சின்னத்திரை, திரைத்துறை சார்புடைய தொழிலாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில், 169 பேருக்கு திருமண உதவித்தொகை, 167 பேருக்கு கண் கண்ணாடி செலவுத்தொகை, 11 தாய்மார்களுக்கு மகப்பேறு உதவித்தொகை, 1,104 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை என்பன உள்ளிட்ட 1,605 பயனாளிகளுக்கு ரூ.48,78,750 மதிப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கடந்த 2016-ல் உதவி கோரி வந்த மனுக்கள்படி, 286 நபர்களுக்கு ரூ.7 லட்சத்து 11 ஆயிரத்து 750 மற்றும் கடந்தாண்டில் உதவி வேண்டி வந்த 163 நபர்களுக்கு ரூ.6 லட்சத்து 49 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் விரைவில் வழங்கப்படும். இவ்வாறு கடம்பூர் ராஜூ பேசினார்.

இக்கூட்டத்தில், செய்தித்துறை செயலர் ஆர்.வெங்கடேசன், இயக்குநர் மற்றும் உறுப்பினர் -செயலர், பொ. சங்கர், அலுவல் சாரா உறுப்பினர்களான திரைப்பட இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், பி.வாசு, வசனகர்த்தா லியாகத் அலிகான், தயாரிப்பாளர் மோகன் காந்திராமன், நடிகையும், பின்னணி பாடகியுமான டி.கே. கலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x