Published : 22 May 2018 08:07 AM
Last Updated : 22 May 2018 08:07 AM

அரசியல், ‘பிக் பாஸ்’ இரண்டிலும் கவனம் செலுத்த முடியும்: கமல்ஹாசன் நம்பிக்கை

அரசியல், பிக் பாஸ் நிகழ்ச்சி ஆகிய இரண்டிலும் தன்னால் உரிய கவனத்தை செலுத்த முடியும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக கேரளாவுக்கு சென்றிருந்த கமல்ஹாசன் நேற்று விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது:

மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவையில் ஜூன் மாதம் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் பங்கேற்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அழைப்பு விடுத்துள்ளேன். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மத்திய அரசு நினைத்தால் இந்த விலை உயர்வை குறைக்க வழிகள் உள்ளன. ஆனால், இவர்கள் செய்ய வேண்டியதை செய்யாமல் உலக அளவில் கச்சா எண்ணெய் விலையை காரணமாக கூறி வருகின்றனர்.

கிராம சபை கூட்டங்களை சரிவர நடத்தினாலே உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பாதி பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களில் மக்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரோடு உள்ள நட்பைவிட கேரளத்தில் எனக்குள்ள நட்பு, சூழல் நன்றாக உள்ளது. இங்குள்ள சூழலும் மாறும். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

அதைத்தொடர்ந்து, மயிலாப்பூரில் உள்ள மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனின் இல்லத்துக்கு சென்ற கமல்ஹாசன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “பாலகுமாரன் சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே அவரை எனக்கு தெரியும். அவர் சினிமாவுக்கு வரவேண்டும் என்று நான்தான் வற்புறுத்தினேன். அற்புதமான எழுத்தாளர் அவர். தமிழுக்கு அவர் கொடுத்துச் சென்ற பரிசுகளுக்கு நன்றி. என்னுடைய அரசியல் பயணம், பிக் பாஸ் நிகழ்ச்சி ஆகிய இரண்டுக்கும் உரிய கவனத்தை என்னால் செலுத்த முடியும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x