Published : 26 May 2018 10:04 AM
Last Updated : 26 May 2018 10:04 AM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து மதுராந்தகத்தில் ஸ்டாலின் சாலை மறியல்: 4 எம்எல்ஏக்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் கைது

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

மதுராந்தகத்தில் சில தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் பகுதிகளுக்கு வந்தார். அந்நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்ட அவர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து மதுராந்தகம் பகுதியில் தொண்டர்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றார். அவரைத் தடுத்து நிறுத்தி போலீஸார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் திமுக மாவட்டச் செயலரும் உத்திரமேரூர் எம்எல்ஏவுமான க.சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், மதுராந்தகம் எம்எல்ஏ புகழேந்தி, செய்யூர் எம்எல்ஏ ஆர்.டி.அரசு ஆகியோரும் கைதாகினர்.

பின்னர், ஸ்டாலின் உள்ளிட்டோரை விடுவிக்கக்கோரிதொண்டர்கள் சூழ்ந்து கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுராந்தகம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வாகனங்கள் அனைத்தும் புறவழிச் சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டன.

பின்னர், மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து அவர்களை அச்சிறுப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். வழியில் சிலாவட்டம் பகுதியில் தொண்டர்கள் மீண்டும் ஸ்டாலின் சென்ற வாகனத்தை மறித்து, அவரை விடுவிக்கக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்திவிட்டு திருமண மண்டபத்துக்குக் கொண்டு வந்து ஸ்டாலினை அடைத்தனர்.

ஸ்டாலின் பேட்டி

கைது செய்யப்பட்ட பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற கடையடைப்பு போராட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. இதற்காக பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், கூட்டணிக் கட்சியினர் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் போராட்டம் இத்துடன் முடிந்துவிடாது. அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு முடிவு எடுக்க வேண்டும். தூத்துக்குடிச் சம்பவத்துக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பழனிசாமியும், டிஜிபி ராஜேந்திரனும் பதவி விலக வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.

பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:

எங்களின் அடுத்த கட்ட போராட்டம் குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசி முடிவு அறிவிக்கப்படும். அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து முடிவு எடுக்க முடியும். ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து நடத்தப்படும் என்று அதன் உரிமையாளர் அவர் விருப்பத்தைக் கூறியுள்ளார். மக்கள் இந்த ஆலையை விரும்பவில்லை. இதனை மூட வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைக்கு திமுக - காங்கிரஸ் காரணம் என்று மத்திய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். அதில் உண்மையில்லை. ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்துக்கும், மோடிக்கும்தான் தொடர்பு உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x