Published : 07 May 2018 02:47 PM
Last Updated : 07 May 2018 02:47 PM

மணல் கொள்ளையர்களால் காவலர் படுகொலை; கடும் நடவடிக்கை தேவை: அன்புமணி

மணல் கொள்ளையர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால்தான், தற்போது நெல்லை மாவட்டத்தில் காவலரையே படுகொலை செய்யும் துணிச்சல் கொள்ளையர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகே நம்பியாற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க ரோந்துப் பணியை மேற்கொண்டிருந்த சிறப்புப் பிரிவு காவலர் ஜெகதீசன் தலையில் இரும்புக் கம்பியால் அடித்து படுகொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும், வேதனையும் அடைந்தேன். ஜெகதீசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நெல்லை மாவட்டம் நம்பியாற்றுப் படுகையில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. அதைத் தடுக்க முயன்றதால் மணல் கொள்ளையர்கள் தான் ஜெகதீசனை படுகொலை செய்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே நம்பியாற்றில் மணல் கொள்ளைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வந்த சதீஷ்குமார் என்ற இளைஞரும், செல்லப்பா என்ற சமூக ஆர்வலரும் கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதற்குக் காரணமான மணல் கொள்ளையர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் தான் அவர்களுக்கு துணிச்சல் ஏற்பட்டு இப்போது காவலரையே படுகொலை செய்யும் அளவுக்கு துணிந்துள்ளனர். மணல் கொள்ளையர்களுக்கு தமிழக ஆட்சியாளர்கள் அளித்து வரும் ஆதரவுதான் இதற்குக் காரணமாகும். அந்த வகையில் இந்த சாவுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.

காவலர் ஜெகதீசன் படுகொலை குறித்தும், கடந்த காலங்களில் நடந்த படுகொலைகள் குறித்தும் விரிவான விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். இதற்குக் காரணமான மணல் கொள்ளையர்கள் மீது தமிழக காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஜெகதீசன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழஙக அரசு முன்வர வேண்டும்” என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x