Published : 03 May 2018 09:08 AM
Last Updated : 03 May 2018 09:08 AM

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது: மே தின விழா கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி உறுதி

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் அம்பத்தூரில் நேற்று முன் தினம் நடந்தது. இதில், முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரு மான கே.பழனிசாமி, ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், மாவட்டச் செயலாளர் அலெக்ஸாண்டர், முன்னாள் அமைச்சர்களான பி.வி.ரமணா, அப்துல்ரஹீம், மாதவரம் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, கட்டுமானப் பணிக்கான உபகரணங்கள், தையல் இயந்திரங்கள், மிதி வண்டிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:

இந்தியாவில் முதன்முதலாக தொழிலாளர் தின விழா சென்னையில்தான் நடந்தது. எண்ணற்ற தொழிலாளர் நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் அதிமுக அரசு, தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக உள்ளது.

இந்தியாவில், தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக நடத்தப்படும் போராட்டங்கள் குறைந்த அளவில் நடக்கும் மாநிலமாக தமிழகம்தான் உள்ளது. சிறுதொழில்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தில் தொழிலாளர்கள் அமைதியான நிலையில் இருப்பதைப் பொறுத்துக் கொள்ளமுடியாதவர்கள் விஷமப் பிரச்சாரம் செய்து, அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறார்கள். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிமுக அரசு தயங்காது. சட்டம் ஒழுங்கைப் பேணிக்காக் கும் அரசாக அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது.

காவிரிப் பிரச்சினையில், நம் உரிமையைப் பெறுவதற்காக பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி அதனைப் பெறும் முயற்சியில் அதிமுக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதிமுகவும், அதிமுக தலைமையிலான தமிழக அரசும் நேர் வழியில் சென்று கொண்டிருக்கின்றன. ஆகவே, கட்சியையும் ஆட்சியையும் யாராலும் ஒன்றும் செய்யமுடியாது.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x