Published : 28 May 2018 08:01 AM
Last Updated : 28 May 2018 08:01 AM

ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு திசை திருப்பும் செயல்: மதுரையில் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

தூத்துக்குடி சம்பவத்தை திசை திருப்பும் முயற்சியாகவே மருத்துவமனையில் ஜெயலலிதா பேசிய ஆடியோவை வெளியிட்டுள்ளதாக அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தான் உண்ணும் உணவுப் பட்டியலை கைப்பட எழுதும் பழக்கம் உடையவர். இதை நானே பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன்.

தற்போது ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் பேசிய ஆடியோவை விசாரணை ஆணையம் திடீரென வெளியிட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது மக்களுக்கு தெரியும். தூத்துக்குடி சம்பவத்தை திசை திருப்பும் முயற்சியாகவே இதை வெளியிட்டுள்ளனர்.

தூத்துக்குடிக்கு அப்பகுதி அமைச்சர் என்ற முறையில் கடம்பூர் ராஜு அங்கு செல்வதாகக் கூறுகின்றனர். இப்போதாவது அவருக்கு அந்த சிந்தனை வந்திருக்கிறதே. ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு அமைச்சர் அங்கு சென்றால் அவருக்கு நல்லது. இல்லையெனில் பெரிய விபரீதம் ஏற்படும் அபாயம் உண்டு.

கடந்த 4 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு மக்களுக்கு நல்லது எதுவும் செய்யவில்லை. வேதனையை மட்டுமே தந்துள்ளது. இதற்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள். இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x