Published : 10 May 2018 01:52 PM
Last Updated : 10 May 2018 01:52 PM

எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: கைது நடவடிக்கைக்கு தடையில்லை என கருத்து

பெண் பத்திரிகையாளர் மற்றும் ஊடகத்துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து அவதூறான கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் மனுவை ஏற்கனவே தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் இதுவரை எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பியது. காவல்துறை விசாரணை சரியாக இல்லை எனவும் அதிருப்தி தெரிவித்திருந்தது.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மிகவும் தரக்குறைவான கருத்தை நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பத்திரிகையாளர்கள் நல சங்கம் சார்பில் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமின் வழங்க ஆட்சேபம் தெரிவித்து, பத்திரிகையாளர்கள் பலர் இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுக்கள் குவிந்தன. மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து மனு செய்தன.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் கடைசி வாரத்தில் முன் ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் வழக்கு மே 3-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதுவரை எஸ்.வி. சேகரை கைது செய்யாமல் இருக்க காவல்துறைக்கு உத்தரவிட நீதிபதி மறுத்துவிட்டார். அவரை கைது செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டும் போலீஸார் கைது செய்யவில்லை.

இந்நிலையில் ஜாமீன் வழக்கு கடந்த 3-ம் தேதி நீதிபதி ராமதிலகம் முன் விசாரணைக்கு வந்தபோது எஸ்.வி சேகரை ஏன் கைது செய்யவில்லை? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி அதிருப்தியை தெரிவித்தது. வழக்கில் எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என 10-க்கும் மேற்பட்ட இடை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ’’எஸ்.வி சேகரின் குற்றம் சாதாரண குற்றமல்ல, பெண்களுக்கு எதிராக சமுதாயத்தில் தவறான எண்ணத்தையும், தவறான நோக்கத்தையும் அவரது பதிவு பிரதிபளிக்கிறது.

மேலும் உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளில் பெண்களுக்கு எதிரான நடைபெறும் குற்றங்களை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அவரது நடவடிக்கை பெண் சமுதாயத்திற்கு எதிரான நடவடிக்கை ஆகவே அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது’’ என்று தெரிவித்திருந்தனர்.

எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், எஸ்.வி.சேகர் மீது போடப்பட்ட பிரிவுகள் ஜாமீன் வழங்கக்கூடிய பிரிவுகள், மேலும் எஸ்.வி.சேகர் பதிவு செய்யவில்லை, வேறொரு பதிவை ஷேர் செய்தார், ஆகவே இடை மனுதாரர் ஆட்சேபனையை ஏற்கக்கூடாது, முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

அரசு தரப்பு வழக்கறிஞர், ‘‘இந்த வழக்கில் விசாரணை முடிவடையவில்லை, இன்னும் நடந்து வருகிறது. இந்த பதிவு குறித்து பேஸ்புக் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது குறித்த உண்மைத்ததன்மை முடிவு வருவதற்காக காத்திருக்கிறோம்’’ என்று தெரிவித்திருந்தார் அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி ‘‘இந்த விசாரணை சரியான முறையில் நடைபெறுவதாக நாங்கள் கருதவில்லை. ஏனென்றால் இத்தனை இடை மனுதாரர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை.

சாதாரண மனிதர் மீது புகார் அளிக்கப்பட்டால் எடுக்கப்படும் நடவடிக்கை இந்த வழக்கில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்த வழக்கில் அதுபோன்று நடவடிக்கை எடுத்துள்ளீர்களா? இந்த வழக்கில் காவல்துறையின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை’’ என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி வழக்கை விசாரணைக்கு எடுத்தவுடன் முன் ஜாமீனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இந்த வழக்கில் சாதாரண மனிதருக்கு எதிரான புகார் மீது என்ன நடவடிக்கையோ அதை காவல்துறை எடுக்கலாம் என போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

இதன் மூலம் எஸ்.வி.சேகரை கைது செய்யும் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. கைது நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்திருப்பதாலும், ஏற்கனவே உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருப்பதாலும் எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு காவல்துறை தள்ளப்பட்டுள்ளதாக சட்டநிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x