Published : 15 Aug 2014 12:48 PM
Last Updated : 15 Aug 2014 12:48 PM

ஜனநாயகத்துக்கு சாவு மணி அடிக்கத் துடிப்பதா?- குண்டர் சட்ட திருத்தத்திற்கு ராமதாஸ் கண்டனம்

குண்டர் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தை ரத்து செய்து, ஏற்கனவே உள்ள சட்டங்களின்படி குற்றங்களைக் குறைக்கவும், குற்றவாளிகளை தண்டிக்கவும் அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "குண்டர் தடுப்புச் சட்டம் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அபாயகரமான செயல்கள் தடுப்புச் சட்டத்தில் தமிழக அரசு அவசரமாக சில திருத்தங்களைச் செய்திருக்கிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர், கணினி குற்றங்களில் ஈடுபடுவோர் ஆகியோர் மீதும் குண்டர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க சட்டத்திருத்தம் வகை செய்கிறது.

அதுமட்டுமின்றி, இத்தகைய குற்றங்களைச் செய்வதையே தொழிலாக கொண்டிருப்பவர்கள்(Habitual offenders) மீது மட்டும் தான் இச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இனி முதன்முறையாக குற்றங்களைச் செய்யும் இளைஞர்களையும் விசாரணையின்றி ஓராண்டு சிறையில் அடைத்து வைக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதா அரசின் மிகக் கொடுமையான இச்சட்டத் திருத்தங்கள் ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிக்கும் செயல் ஆகும்.

கட்டுப்படுத்தவே முடியாத குற்றவாளிகளை ஓராண்டாவது தடுப்புக்காவலில் வைக்க வேண்டும்; அதன் மூலம் அவரது குற்ற நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக கொண்டுவரப் பட்டது தான் குண்டர் சட்டம் ஆகும். இந்த சட்டம் நல்ல நோக்கம் கொண்டது என்றாலும், அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது என்பதால் இதை கடைசி ஆயுதமாகவே பயன்படுத்த வேண்டும்.

நீதிமன்றங்களும் பல்வேறு காலகட்டங்களில் இதை வலியுறுத்தியுள்ளன. ஆனால், சட்டம்&ஒழுங்கை காக்க வேண்டும் என்ற நோக்கத்தை விட அரசியல் எதிரிகளையும், பிடிக்காதவர்களையும் பழிவாங்கவே இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்களைக் காக்கும் கேடயமாக திகழ வேண்டிய குண்டர் சட்டம் எதிரிகளை பழிவாங்குவதற்கான ஆயுதமாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டால் இச்சட்டம் வரைமுறையின்றி பயன்படுத்தப்படுவது வாடிக்கையாகி விட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இச்சட்டத்தின்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 90விழுக்காட்டிற்கும் மேற்பட்டோரை, அவர்கள் மீதான நடவடிக்கை தவறு என்று கூறி நீதிமன்றங்கள் விடுதலை செய்திருக்கின்றன. கடந்த ஆண்டு நீதி கேட்டு போராடிய 134 பா.ம.க.வினர் தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் பா.ம.க. சட்டமன்றக்குழுத் தலைவரும், வன்னியர் சங்கத் தலைவருமான ஜெ.குரு மீது அடுத்தடுத்து 4 முறை தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டது. இறுதியில் இவை அனைத்தையும் ரத்து செய்த உயர்நீதிமன்றம் அனைவரையும் நிரபராதிகள் என்று கூறி விடுதலை செய்தது. இவையெல்லாம் குண்டர் தடுப்புச்சட்டம் எப்படியெல்லாம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு உதாரணம் ஆகும்.

குண்டர் சட்டத்தை பயன்படுத்த நீதிமன்றங்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்த காலத்திலேயே அந்த சட்டம் இந்த அளவுக்கு தவறாக பயன்படுத்தப் பட்டது. இப்போது அந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டிருப்பதுடன், முதல்முறையாக குற்றம் இழைப்போரைக் கூட குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கலாம் என திருத்தம் செய்யப்பட்டிருப்பதால், இனி அரசியல் எதிரிகள் மீது கண்மூடித்தனமாக இச்சட்டம் ஏவப்படும் ஆபத்துள்ளது.

மக்களவைத் தேர்தலின்போது 144 தடை உத்தரவை பிறப்பித்து முறைகேடுகளை அரங்கேற்றியதைப் போல வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் செயல்வீரர்களை இச்சட்டப்படி சிறையில் அடைத்துவிட்டு மோசடிகளைக் கட்டவிழ்த்து விடவே இத்திருத்தத்தை அ.தி.மு.க. செய்துள்ளதோ என்ற ஐயமும் எழுகிறது.

பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காகத் தான் இத்தகைய திருத்தங்கள் செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படும் காரணம் சொத்தை வாதமாகும். கடந்த 2012ஆம் ஆண்டு திசம்பர் மாதம் தில்லியில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அத்தகைய குற்றங்களைத் தடுப்பதற்காக 13 அம்சத் திட்டத்தை திட்டதை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

ஆனால், இப்போது செய்யப்பட்டுள்ள குண்டர் சட்டத் திருத்ததைத் தவிர அவற்றில் ஒன்றைக்கூட அரசு செயல்படுத்தவில்லை. குறிப்பாக பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும், மகளிர் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும், அந்த நீதிமன்றங்களில் பெண் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இதனால், தில்லி மாணவியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி மாணவி புனிதா வழக்கிலும் விசாரணை விரைவாக நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தில்லி மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்ட நிலையில், புனிதா வழக்கில் முழுநேர அரசு வழக்கறிஞர் நியமிக்கப்படாததால் அவ்வழக்கின் விசாரணை இன்னும் தொடங்கப்படாமல் 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டில் மட்டும் பாலியல் வன்கொடுமைகள் 30 விழுக்காட்டிற்கும் கூடுதலாக அதிகரித்துள்ளன. இதையெல்லாம் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இப்போது திடீரென பெண்களை பாதுகாக்க குண்டர் சட்டத்தை பயன்படுத்தப் போவதாக அறிவித்திருப்பது ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு நடத்தும் நாடகத்தின் உச்சகட்டமாகும்.

பாலியல் குற்றங்களாக இருந்தாலும், கணினி குற்றங்களாக இருந்தாலும் அவற்றிற்கு காரணமான குற்றவாளிகளை தண்டிக்க இந்திய தண்டனைச் சட்டத்திலும், தகவல் தொழில்நுட்ப சட்டத்திலும் ஏராளமான பிரிவுகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி, வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவது தான் உடனடித் தேவையாகும்.

அதைவிடுத்து இந்த குற்றங்களை குண்டர் சட்ட வரையறைக்குள் கொண்டுவருவதும், முதல்முறையாக தவறு செய்ததாக கூறப்படுபவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம் என அறிவிப்பதும் வீணான பழிவாங்கல்களுக்கே வழிவகுக்கும். எனவே, குண்டர் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தை ரத்து செய்து, ஏற்கனவே உள்ள சட்டங்களின்படி குற்றங்களைக் குறைக்கவும், குற்றவாளிகளை தண்டிக்கவும் அரசு முன்வர வேண்டும்" இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x