Published : 24 Jul 2024 04:15 AM
Last Updated : 24 Jul 2024 04:15 AM

அரசின் பிராண்ட் தூதராக செயல்பட வேண்டும்: திட்டப் பயனாளிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு

மாதவரம் சூரப்பட்டு வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற விழாவில், 2,124 பயனாளிகளுக்குவீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். உடன் அமைச்சர்கள் முத்துசாமி, சேகர்பாபு, சாத்தூர் ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்டோர்.

சென்னை: அரசின் பிராண்ட் தூதராக செயல்படவேண்டும் என்று திட்டப் பயனாளிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். வருவாய்த் துறை சார்பில், சென்னைமாதவரம் சூரப்பட்டு வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2,124 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது: ஏழை, எளிய அடித்தட்டு மக்கள், நடுத்தர வர்க்க மக்களுடைய ஏற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை தமிழகஅரசு வகுத்து, கொடுத்துக் கொண்டிருக்கிறது. வீடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு, அந்த வீட்டுக்கான பட்டாவும் மிகமிக முக்கியம். அந்த வகையில், பட்டா வேண்டும் என்பவருடைய பல வருட கனவு இன்று நனவாகி இருக்கிறது.

உங்களுக்கு அளித்த வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்றி இருக்கிறார். பல ஆண்டுகளாக பட்டா இல்லாதவர்களுக்குகூட இன்று பட்டா வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்,தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சிஎம்டிஏ, ஒருமுறை வரன்முறை செய்யப்பட்ட திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பட்டாக்களுக்கு கணினி பட்டா வழங்கப்பட்டுள்ளது.

நத்தம் செட்டில்மென்ட், டவுன் செட்டில்மென்ட்டை பொறுத்த வரை 2018-க்கு பின் சென்னை வருவாய்மாவட்டத்துடன் இணைந்த பகுதிகளில் வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கப்படுகிறது.

இன்று 28,848 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்க தயார் நிலையில் இருக்கிறது. இன்றிலிருந்து உங்கள் வீட்டுமனை, வீடு சட்டப்பூர்வமாக சொந்தமாகி உள்ளது. திராவிட மாடல் அரசு இதுமட்டுமின்றி, எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

இந்த திட்டங்களால் வறுமை ஒழிப்பு -மகளிர் முன்னேற்றம், தரமான கல்வி,சுகாதாரம் உள்ளிட்ட 13 துறைகளில் நாட்டிலேயே நம்பர் 1 மாநிலமாக தமிழகம் வந்துள்ளது. நீங்கள் அனைவரும்திமுக அரசின் திட்டப் பயனாளிகள்மட்டுமல்ல, இந்த திட்டங்களின் பங்கேற்பாளர்கள்.

எனவே, இந்த அரசின் பிராண்ட் தூதராக நீங்கள் செயல்பட வேண்டும். உங்களுக்காகவும், உங்களுடைய அடுத்தடுத்த தலைமுறைகளுக்காகவும் உழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், சு.முத்துசாமி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு,மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, எம்எல்ஏக்கள் எஸ்.சுதர்சனம், தாயகம்கவி, ஆர்.டி.சேகர், நா.எழிலன், த.வேலு, ஐட்ரீம் மூர்த்தி, கா.கணபதி, ஜோசப் சாமுவேல், அ.வெற்றி அழகன், கே.பி.சங்கர், ஜான் எபினேசர், ஏ.எம்.வி.பிரபாகரராஜா, துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x