Published : 26 May 2018 09:23 PM
Last Updated : 26 May 2018 09:23 PM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை திசை திருப்ப ஜெயலலிதா ஆடியோ வெளியீடா?- வலைதளத்தில் விமர்சிக்கும் நெட்டிசன்கள்

ஜெயலலிதா பேசியதாக ஆடியோ வெளியானது தூத்துக்குடி சம்பவத்தை திசை திருப்பவே என்று நெட்டிசன்கள் வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் கடந்த நான்கு நாட்களாக கொழுந்துவிட்டு எரிகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கு ஆணையிட்டது யார், எத்தனை பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

துப்பாக்கிச் சூட்டில் உள்ள சந்தேகம், விதிமீறல்கள், போலீஸாரின் அத்துமீறல் சட்டவிரோதமாக இளைஞர்களை அடைத்து வைத்திருந்தது போன்ற பல விஷயங்களை வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதில் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி இருப்பவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவர் பதவி விலக வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. அவர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என வெவ்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்தி வருகிறது.

இது தவிர தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பலை காரணமாக போராட்டங்கள் ஆங்காங்கே தன்னெழுச்சியாக நடந்து வருகிறது. ஜனநாயக இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் என தினம் தினம் துப்பாக்கிச் சூட்டின் சூடு ஆறாமல் இருக்கிறது.

வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் என வலைதளங்களில் கடும் விமர்சனம், தொடரும் நிலையில் இன்று காலை திடீரென அப்போலோவில் இருந்தபோது ஜெயலலிதா சாப்பிட்ட உணவுப் பட்டியல் என்ற ஒன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது வெளியிடப்பட்டது. அனைத்து செய்திகளும் அதை நோக்கித் திரும்பின. ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 50 நாட்களுக்கு முன் அதாவது ஆகஸ்ட் 2 2016-ல் கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் அது.

சற்று நேரத்தில் ஜெயலலிதா பேசியதாக ஆடியோ வெளியானது. மேற்கண்ட செய்திகள் மக்களை தூத்துக்குடி சம்பவத்தின் மீதுள்ள கோபத்திலிருந்து திசை திருப்பவே என்று திமுக செயல் தலைவர், சுப வீரபாண்டியன் போன்றோர் கண்டித்துள்ளனர். வலைதளங்களிலும் ஆடியோ வெளியிடப்பட்டதன் நோக்கம் என்ன என்று சந்தேகம் எழுப்பி பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக சுப.வீரபாண்டியன் தனது ட்விட்டர் பதிவில், “ஜெயலலிதா இட்லி, ரொட்டி, ஆப்பிள் கேட்ட குறிப்பும், .அவருடைய குரல் பதிவு ஒன்றும் வெளியாகி உள்ளது. உப்புச் சப்பற்ற இந்தச் செய்திகள் இப்போது ஏன் வெளியிடப்படுகின்றன? யாரும் தூத்துக்குடி பற்றிப் பேசாமல், இது குறித்துப் பேசுங்கள் என்பதற்குத்தான்” என்று கண்டித்துள்ளார்.

விமான நிலையத்தில் பேட்டி அளித்த மு.க.ஸ்டாலின் “இந்த ஆட்சியாளர்கள் தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுத் தள்ளி, என்கவுண்டர் செய்திருக்கிறார்கள். அதனால் மக்களிடத்தில் இந்த ஆட்சி மீது இன்னும் அதிகமான வெறுப்பு ஏற்பட்டு, இந்த ஆட்சி எப்போது ஒழியும் என்ற உணர்வோடு இருக்கின்ற நிலையில், மக்களை திசை திருப்பும் நோக்கத்துடன், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகம் விசாரணை கமிஷனை பயன்படுத்துகிறார்கள் என்ற எண்ணம் வந்திருக்கிறது” என்று பதிலளித்துள்ளார்.

ஷாமு சதக்கத்துல்லா என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''ஸ்டெர்லைட் விவகாரம் திசை திருப்பும் வகையாவே ஜெயலலிதா பேசிய ஆடியோ ரிலீஸ்.. ஆஹா என்ன ஒரு திட்டம்'' என்று தெரிவித்துள்ளார்.

கடைசி மனிதன் என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''ஆறுமுகசாமி கமிஷனில் சமர்ப்பிக்கப்பட்ட எந்த தகவலும் இதுவரை வெளிவந்ததில்லை, இப்போது கசியவிட்டதான் நோக்கம் தூத்துக்குடியே'' என்று தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் எந்தவித தீர்வும் வராத நிலையில் அந்தப் பிரச்சினையை பின்னுக்கு தள்ள எடுக்கப்படும் எந்த முடிவும் தோல்வியையே தழுவும் என்பது சில மணி நேரம் பரபரப்பை ஊட்டிய ஜெயலலிதாவின் செய்தியே சாட்சி.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x