Published : 08 May 2018 10:50 AM
Last Updated : 08 May 2018 10:50 AM

தமிழகத்தில் மார்க்ஸின் பெருமை கொண்டாடப்படுகிறது: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு பெருமிதம்

மார்க்ஸின் பெருமை தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள், கட்சிகளால் கொண்டாடப்படுவது வரவேற்கத்தக்கது என்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்தார்.

கோத்தே இன்ஸ்டிடியூட், மேக்ஸ் முல்லர் பவன், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் ‘மார்க்ஸ் - எங்கெல்ஸ் தேர்வு நூல்கள்’- 20 தொகுதிகள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் நூலை வெளியிட, ஜெர்மன் துணைத் தூதரக அதிகாரி ஆஹிம் ஃபாபிக் பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவுக்கு தலைமையேற்ற இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பேசும்போது, ‘‘மார்க்ஸின் 200-வது பிறந்த தினத்தை முன்னிட்டு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த நூல், எல்லோருக்கும் பயன்படக்கூடியதாக இருக்கும். மார்க்ஸின் மூலதனம் நூல் இந்தியாவில் சில மாநிலங்களில் மட்டுமே அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் 20 ஆண்டுகளுக்கு முன்பே அந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மார்க்ஸை பற்றி சிறந்த எழுத்தாளரான வெ.சாமிநாத சர்மா குறிப்பிடும்போது, ‘உழைப்பையும் அறிவையும் இணைத்துக்கொண்டு வந்த தத்துவ ஆசிரியர்’ என்கிறார். மார்க்ஸின் பெருமை தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள், கட்சியினரால் கொண்டாடப்படுவது வரவேற்கத்தக்கது’’ என்றார்.

விழாவில் மார்க்ஸ் - எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் பதிப்பாசிரியர் ந.முத்துமோகன், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சண்முகம் சரவணன், பொது மேலாளர் தி.ரத்தினசபாபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x