Last Updated : 05 May, 2018 09:00 AM

 

Published : 05 May 2018 09:00 AM
Last Updated : 05 May 2018 09:00 AM

உலக சுகாதார அமைப்பின் புகையிலை கட்டுப்பாடு நெறிமுறைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்: மத்திய அரசின் முயற்சிக்கு உற்பத்தியாளர்கள், மருத்துவர்கள் வரவேற்பு

உலக சுகாதார அமைப்பின் புகையிலைக் கட்டுப்பாடு நெறிமுறைகளை ஏற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்திய தொழில், வர்த்தக கூட்டமைப்பு (ஃபிக்கி) மற்றும் கேபிஎம்ஜி இணைந்து வெளியிட்ட அறிக்கையின்படி, சந்தையில் கடந்த 2010-ல் 15 சதவீதமாக இருந்த சட்டவிரோத சிகரெட் விற்பனை, 2015-ம் ஆண்டு 21 சதவீதமாக அதிகரித்துள்ளது. சுமார் ரூ.25,000 கோடி அளவுக்கு இந்தியாவில் சட்டவிரோதமாக சிகரெட் விற்பனை நடைபெறுகிறது.

இந்நிலையில், புகையிலைப் பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்த புகையிலைக் கட்டுப் பாடு குறித்த உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூஎச்ஓ) நெறிமுறைகளை ஏற்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சில தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், உலக சுகாதார அமைப் பின் புகையிலைக்கு எதிரான கட்டுப்பாடு அமைப்பில் இந்தியா ஓர் அங்கமாகியுள்ளது.

இதன் காரணமாக, அனைத்து வடிவிலான புகையிலைப் பொருட்களின் சட்டவிரோத உற்பத்தி, கடத்தல் ஆகியவற்றை தடுக்க வழிவகை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக புகையிலை கட்டுப்பாடுக்கான தமிழக மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிரில் அலெக்சாண்டர் கூறும்போது, “டபிள்யூஎச்ஓ நெறிமுறைகளை இந்தியா ஏற்றுக்கொண்ட தன் மூலம் சட்டவிரோத புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது தடுக்கப்படும். மேலும், சட்டவிரோதமாக விற்பனை, கடத்தல் போன்றவற்றுக்கு குற்ற வழக்குப் பதிவு செய்யவும் வழிவகை ஏற்பட்டுள்ளது. சட்ட விரோத வர்த்தகம் ஒழிக்கப்படும்போது, புகையிலையின் பயன் பாடு குறையும். அதனால் புகையிலைப் பொருட்களால் ஏற்படும் நோய்கள், மரணங்கள் குறை யும்”என்றார்.

அமல்படுத்துவது அவசியம்

புற்றுநோய் வகைகளில் வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பான்பராக், குட்கா போன்ற வாயில் மெல்லும் புகையிலைப் பொருட் கள் இதற்கு முக்கிய காரணமாக உள்ளன. இதுகுறித்து, புற்று நோய் சார்பியல் மருத்துவத் துறை பேராசிரியர் டாக்டர் அசார் உசேன் கூறும்போது, “புகையிலைப் பொருட்கள் மூலம் பல கோடி ரூபாய் வர்த்தகம் நடை பெறுவதால் சட்டவிரோத விற்பனையைத் தடுப்பதில் இன்றுவரை தடுமாற்றம் நிலவி வரு கிறது. இதில், பல்வேறு துறை உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எனவே, சட்டவிரோத விற்பனையை தடுப்பதற்கான விதிகளை அரசு கடுமையாக அமல் படுத்தினால் மட்டுமே விற்பனை யைத் தடுக்க முடியும். அனைத்துவிதமான புகையிலைப் பொருட் களையும் முற்றிலுமாக தடைசெய்தால் 50 சதவீத அளவுக்கு புற்றுநோய் பாதிப்பைத் தடுக்கலாம்” என்றார்.

உடல் நலம் பாதிப்பு

தமிழ்நாடு பீடி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.முகமது அஷ்ரப் கூறும்போது, “சந்தையில் உள்ள பீடியில் 25 சதவீதம் வரை சட்டவிரோத மானவை. சட்டவிரோத புகையிலைப் பொருட்களால் அரசுக்கு வரி வருவாயும், முறையாக உற்பத்தி செய்பவர்களுக்கும் வரு வாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது. அவற்றின் விற்பனையைத் தடுக்க அரசு எடுக்கும் முயற்சியை நாங்கள் வரவேற் கிறோம். புகையிலைப் பொருட்கள் உடல் நலத்துக்கு தீங்கானவைதான். ஆனால், சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் தரம் குறைந்த புகையிலையையும், சுவைக்காக ரசாயனங்களையும் சேர்க்கின்றனர். விலை குறைவு என்ற காரணத்துக்காக அந்த பொருட்களை வாங்குபவர்களின் உடல் நலன் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள நெறிமுறைகளை அரசு முறைப் படி அமல்படுத்த வேண்டும்” என வலியுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x