Published : 20 May 2018 08:52 PM
Last Updated : 20 May 2018 08:52 PM

கர்நாடகத்தில் அமையும் புதிய அரசுடன் சுமுகமாகப் பேசி காவிரி நீரை பெறத் தவறினால் திமுக மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்கும்: ஸ்டாலின்

கர்நாடகத்தில் அமையும் புதிய அரசுடன் சுமுகமாகப் பேசி ஜூன் மாதம் பெற வேண்டிய காவிரி நீரை பெறத் தவறினால் திமுக மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசினார்.

வேளாங்கன்னியில் இன்று நடைபெற்ற திருமணவிழாவில் பங்கேற்ற ஸ்டாலின் மணமக்களை வாழ்த்திய பிறகு பேசியதாவது:

''தமிழ்நாட்டிலே ஒரு ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. நடந்து கொண்டு இருக்கிறது என்றுகூட சொல்லக்கூடாது. ஒரு மூலையிலே முடங்கி உட்கார்ந்து கொண்டிருக்கிறது, அதுவும் அடிமைத்தனமாக முடங்கி இருக்கிறது. மத்தியில் இருக்கக் கூடிய பாஜக ஆட்சி என்ன சொல்கிறதோ? என்ன உத்தரவு இடுகிறதோ? உத்தரவு இடவேண்டிய அவசியம் கூட இல்லை, ஒரு கண்ஜாடை காட்டினாலே போதும், அதற்கு அடிபணிந்து நடக்கக்கூடிய ஒரு ஆட்சி தமிழ்நாட்டிலே நடந்து கொண்டிருக்கிறது.

அண்மையிலே நடந்த காவிரி பிரச்சனையைப் பொறுத்தவரையில் சட்டரீதியாக, முழுமையாக அல்லாமல் ஓரளவிற்கு வெற்றிபெற்று இருக்கிறோம். இந்த வெற்றியை நாம் எப்படி பெற்றோம்? ஓரளவிற்கு நாம் வெற்றியை பெற்றிருக்கிறோம் என்று சொன்னால், எவ்வளவு ஆண்டுகாலம் நாம் சட்ட பிரச்சினையை கையாண்டு இருக்கிறோம். நம் தலைவர் கருணாநிதி ஐந்தாண்டு காலம் முதல்வராக இருந்த காலகட்டங்களில் எல்லாம், காவிரி நதி நீர் பிரச்சனைக்காக எத்தனை முறை டெல்லிக்கு சென்று, எத்தனை பிரதமர்களை காவிரி நதி நீர் பிரச்சனைக்காக சந்தித்துப் பேசி இருக்கிறார். மத்திய நீர் வளத்துறை அமைச்சரை எத்தனை முறை அவர் அணுகியிருப்பார். எத்தனைமுறை தொலைபேசியிலே தொடர்பு கொண்டிருப்பார். எத்தனை கடிதங்களை எழுதி இருப்பார். சட்டரீதியில் பிரச்சினை ஒருபுறம் இருந்தாலும். நம்முடைய தமிழ்நாட்டு விவசாய பெருங்குடி மக்களுக்கு எப்படியாவது தண்ணீர் பெற்றுத் தரவேண்டும் என்று, நட்பு ரீதியாக கர்நாடக முதல்வர்களை தொடர்பு கொண்டும், அங்கே இருக்கும் அமைச்சர்களையும் தொடர்பு கொண்டும் பேசி, காவிரி நதி நீரை பெற்று தந்திருக்கிறார் என்பதை, அவ்வளவு எளிதில் நாடு மறந்துவிடாது.

அண்டை மாநிலங்களோடு ஒரு சுமுகமான உறவை ஏற்படுத்திக் கொண்டு தலைவர் கருணாநிதி அனைத்தையும் நிறைவேற்றி கொடுத்திருக்கிறார். ஆனால், இப்பொழுது மத்தியில் நடைபெற்று கொண்டிருக்கக்கூடிய ஆட்சியாக இருந்தாலும், தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியாக இருந்தாலும், காவிரி நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நிலையிலே எவ்வளவு சுணக்கமான நிலையில் இருந்திருக்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி, ஆறு வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவான, நியாயமான, அதேசமயம் அமைத்தே தீர வேண்டும் என்ற இறுதியான தீர்ப்பு தருகிறது. ஆனால், தீர்ப்பு வழங்கியதற்கு பின்னால் கர்நாடக மாநிலம் எதிர்க்கிறது என்று சொன்னால் கூட, அது மாநில பிரச்சினை என்று அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், மத்தியில் இருக்கும் அமைச்சர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பே இல்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற தொனியில் பேசத் தொடங்கினார்கள். அதை எதிர்க்கும் விதமாக, எதிரிக்கட்சியாக இருக்கும் திமுக கண்டித்தது. ஆனால், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கக் கூடியவர்கள் கண்டிக்கவில்லை, எதிர்க்கவில்லை. தவறு என்றுகூட சுட்டிக்காட்டவில்லை.

ஆகவேதான் உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என்று சொன்னோம். கர்நாடக, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் அவர்களின் மாநில பிரச்சினை என்று வரும்பொழுது, நல்லதோ, கெட்டதோ எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அரசியலை மறந்து, அரசியலை கடந்து, ஆளும்கட்சிகள், எதிர்க்கட்சிகள், உதிரிக்கட்சிகளாக இருந்தாலும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து கூட்டத்தை கூட்டி தீர்மானம் போடுகிறார்கள். சட்டப்பேரவையில் ஏகமனதாக தீர்மானம் போடுகிறார்கள், போராட்டம் நடத்துகிறார்கள், ஆர்ப்பாட்டமும் நடத்துகிறார்கள். அதேபோல், தமிழ்நாட்டிலே நடக்கிறதா என்றால் இல்லை.

ஆகவே, அனைத்து கட்சி கூட்டம் நடக்க வேண்டும் என்பதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில், நான் குரல் கொடுத்தேன். இதே, தமிழ்நாட்டில், நம் தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டிய பொழுதெல்லாம் அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவும் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டாலும், எதிர்த்து வெளிநடப்பு செய்திருப்பது என்பது வேறு, இருப்பினும், தலைவர் கருணாநிதி அனைத்துக் கட்சியையும் ஒன்று திரட்டினார். காவிரி நதி நீர் விவகாரத்தில் நீதிமன்றத்தில் எந்தவித பிரச்சினை வந்தாலும், அதை எப்படி எதிர்கொள்ளலாம் என்று, அனைத்துக் கட்சிக்கூட்டத்தை கூட்டித்தான் முடிவு செய்து அதை நிறைவேற்றி இருக்கிறார்.

ஆனால், இன்றைக்கு இருக்கும் ஆட்சி இதுபோன்ற பணியில் ஈடுபட முன்வரவில்லை. ஆகவே, நாம் அனைத்துக் கட்சி கூட்டத்தை முன் வந்த போது, அவர்கள் தமிழக அரசின் சார்பில் நாங்களே கூட்டுகிறோம் என்று அறிவித்தார்கள். அறிவித்த அடுத்த வினாடியே நாம் கூட்ட இருந்த கூட்டத்தை ரத்து செய்தோம். காரணம், இது கட்சி பிரச்சினையோ, சொந்த பிரச்சினையோ, தனிப்பட்ட பிரச்சினையோ அல்ல, இது விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதார பிரச்சினை. இந்த காவிரி பிரச்சினையை வைத்து அரசியல் செய்ய விரும்பாத காரணத்தால் அதனையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நமது கூட்டத்தையும் ரத்து செய்துவிட்டு, அரசு கூட்டிய கூட்டத்தில் நாம் கலந்து கொண்டோம். அங்கு முக்கியமான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

அது என்னவென்றால், முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து அழுத்தம் தருவது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தீர்மானம் கிடைத்தது என்ற தகவல்கூட டெல்லியில் இருந்து வரவில்லை. அடுத்து சட்டப்பேரவையில் தீர்மானம் போட்டபோது, அதிமுக கொண்டுவரும் தீர்மானம், எனவே திமுக கலந்து கொள்ளாது என்று சொல்லாமல், கட்சி பாராமல் கலந்துகொண்டோம். ஏனென்றால், இது காவிரி நதி நீர் பிரச்சினை. நாங்களே முன்மொழிந்து ஏகமனதாக நிறைவேற்றி தருகிறோம் என்று சொல்லி தீர்மானத்தை நிறைவேற்றி கொடுக்கப்பட்டது. அதற்கும், டெல்லியில் இருந்து பதில் வரவில்லை. நடவடிக்கை எடுக்கிறோம் எனற தகவல் கூட வரவில்லை. அந்தத் தீர்மானத்தை அப்படியே கிடப்பிலே போட்டார்கள். அதற்கு பிறகு, கர்நாடக தேர்தல் முடிந்த பிறகு, செயல் வரைவுத்திட்டத்தை உச்ச நீதிமன்றத்திலே தாக்கல் செய்கிறோம் என்று மத்திய அரசு ஒரு மனு தாக்கல் செய்கிறார்கள்.

இப்படியே காலம் தாழ்த்தி, தாழ்த்தி இப்பொழுது ஓரளவிற்கு, காவிரி மேலாண்மை வாரியம் என்பதற்கு பதிலாக, காவிரி ஆணையம் என்ற பெயரை பயன்படுத்தி, அதேசமயம் வாரியத்திற்கு உள்ள அனைத்து அதிகாரங்களும், இந்த ஆணையத்திற்கும் உண்டு என்றுசொல்லி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த கட்டுப்பாட்டுகள் முழுவதும் மத்திய அரசின் கையில் தான் இருக்கும் என்ற செய்தியையும் வெளியிட்டு இருக்கிறார்கள். இவ்வாறு, நமக்கு ஒத்துபோகக் கூடிய செய்திகள் உச்ச நீதிமன்றத்தின் மூலம் வழங்கப்பட்டு இருந்தாலும், இன்னும் சில சந்தேகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அந்த சந்தேகங்களை போக்க வேண்டும் என்று சொனனால், உடனடியாக தீர்ப்பை நிறைவேற்றி தரவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை திறந்துவிடப்பட்டு, விவசாயப் பெருங்குடி மக்கள் பயன்பெற வேண்டும்.

இந்த ஏழு ஆண்டுகாலம் காவிரி நதி நீர் இல்லாமல் போனதை மாற்ற, இப்பொழுது கிடைத்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வைத்துக்கொண்டு, ஜூன் மாதத்தில் தண்ணீர் திறந்து விடக்கூடிய சூழல் உருவாக்க வேண்டும். இல்லை என்று சொன்னால், திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் நிச்சயம் உருவாகும் என்று கூறுகிறேன்.

இந்த டெல்டா பகுதியிலே தான், ஒன்பது கட்சிகளோடு இணைந்து ஏறக்குறைய ஒருவார காலம், தமிழ்நாட்டில் அல்ல, இந்திய வரலாறில் இல்லாத அளவில் ஒரு மிகப்பெரிய மீட்புப் பயணத்தை நட்த்திக் காட்டினோம். அப்படி நடத்தும்போது, விவசாய பெருங்குடி மக்கள், பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள், தாய்மார்கள் அத்துனைபேரும் எழுச்சியோடு ஆதரவு தந்ததை பார்த்த பிறகுதான். உச்ச நீதிமன்றமே, இறங்கி வந்து நமக்கு ஓரளவிற்கு சாதகமான தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். அப்படி வழங்கியிருக்கும் சாதகமான சூழ்நிலையை இங்கு இருக்கும் ஆட்சி முறையாக பயன்படுத்த வேண்டும். இன்னும் இரண்டு நாட்களில் கர்நாடக மாநிலத்தில் ஒரு புதிய அமைச்சரவை பதவி பிரமாணம் ஏற்றுக்கொள்ள இருக்கிறது. அதுவும், மதச்சார்பற்ற நிலையில் ஒரு ஆட்சி பொறுப்பேற்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

நமது அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்கக் கூடிய ஆட்சியோடு ஒரு சுமுகமான சூழலை ஏற்படுத்தி, பேசி தீர்த்துக்கொண்டு. சட்டரீதியாக நாம் வெற்றிபெற்று இருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில், எந்தளவிற்கு தண்ணீரை பெற வேண்டுமோ, அந்தத் தண்ணீரை பெற்று, இந்த அரசு விவசாயப் பெருங்குடி மக்களுக்கு வழங்க முன்வர வேண்டும். அப்படி வழங்க முன்வரவில்லை என்று சொன்னால், அதற்கான போராட்டத்தை திமுக விரைவிலே முன்னின்று நடத்தும்.''

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x