“முதல்வர் கனவுடன் அரசியல் கட்சி தொடங்குகின்றனர்” - திருமாவளவன் விமர்சனம் @ மேலவளவு 

“முதல்வர் கனவுடன் அரசியல் கட்சி தொடங்குகின்றனர்” - திருமாவளவன் விமர்சனம் @ மேலவளவு 
Updated on
1 min read

மதுரை: மேலூர் அருகே மேலவளவு கிராமத்தில் கடந்த 1997-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உட்பட 6 பேரின் 27-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி, அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ பாலாஜி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர்வலையம் வைத்து வீரவணக்க அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் இந்த நிகழ்வில் திருமாவளவன் பேசும்போது, “முதல்வர் கனவுடன் தற்போது அரசியல் கட்சி தொடங்குகின்றனர். அடுத்த முதல்வர் நான்தான் என அறிவித்துக் கொள்கின்றனர். நான் மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன். பூமாலை கிடைக்கும் என, நினைக்க வேண்டாம். கைவிலங்கிட தயாராகவேண்டும். எனது 27 வயதில் பிரகடனம் செய்தது இதைத்தான். மக்களை அரசியல் படுத்த வேண்டும். கள்ளச்சாராயத்தை ஒழிக்கவேண்டும் என, அரசியல்வாதிகள் சொல்கின்றனர். மக்கள் மதுபானக் கடைகளை மூடவேண்டும் என்கின்றனர்.

மேலவளவு சம்பவத்துக்கு பதிலுக்கு பதில் செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் இருந்தது. அப்போது எனக்கும் பொறுப்பு இருந்ததால் அதை செய்யவில்லை. போராட்டம், பேரணி என அரசியல் நடவடிக்கையாக மாற்றினேன். இதனால்தான் விசிக நாடாளுமன்றம் வரை சென்றிருக்கிறது.

விசிக அங்கீகாரம் பெற்ற இயக்கம். 4 எம்எல்ஏக்கள், 2 எம்.பி.க்கள் என தவிர்க்க முடியாத அரசியல் கட்சி. அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக நடக்கும் யுத்தம் இது. இதனை பிரகடனம் செய்தது விசிக. நாடாளுமன்றத்துக்கு வந்ததும் முதலில் அரசமைப்பு சட்டத்தை தொட்டு தலைவங்கினார் பிரதமர் மோடி” இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

மேலவளவு முருகேசன் உள்ளிட்டோரின் நினைவு தினத்தையொட்டி, மேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் எஸ்.பி, அரவிந்த் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in